கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவின் போது ராயப்பேட்டை பகுதியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு ராயப்பேட்டை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடந்து முடிந்தது. பொதுக்குழு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைப்பற்றினார்கள்.
இதனால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த கலவரம் தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 400 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கலவரம் நடந்த போது 16 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள நபர்களை அடையாளம் காணும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளார்கள்..
இந்நிலையில் இன்று (ஜூலை 18) ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு தனித்தனியே ராயப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கலவரத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி மூலம் கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 15-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர்கள் அனைவரும் நாளை (ஜூலை 19) ராயப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும், எடப்பாடி ஆதரவாளர்கள் நாளை மறுநாள் (ஜூலை 20) காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.
மோனிஷா