ஆணவக் படுகொலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் ரஞ்சித் மீது விசிக சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 12) புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆணவப்படுகொலை வன்முறை அல்ல, அது அக்கறை” என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரஞ்சித்துக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில், “திரைப்பட நடிகர் ரஞ்சித் தான் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் என்கிற திரைப்படத்தில் திட்டமிட்டு சமூக அமைதியை சீர்குலைக்கிற வகையிலும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிற சமூகங்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அவமானப்படுத்த அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும் பல்வேறு காட்சிகளை அந்த திரைப்படத்தின் டிரெய்லரில் வைத்திருந்தார்.
இது தொடர்பாக நாங்கள் காவல்துறை தலைவரிடம் ஏற்கெனவே புகார் அளித்திருந்தோம். திரைப்பட தணிக்கை குழுவிடமும் புகார் அளித்திருந்தோம். இது தொடர்பாக திட்டமிட்டு செய்திருக்கிற வன்மமான காட்சிகள் நீக்கப்பட்டு அந்த திரைப்படம் இப்போது வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில் கடந்த 10ஆம்தேதி செய்தியாளர்களை சந்தித்திருக்கிற நடிகர் ரஞ்சித் அவர்கள் ஆணவ படுகொலைகளை நியாயப்படுத்தும் வகையிலும் அது தவறில்லை என்கிற வகையிலும் அதை ஊக்குவிக்குற வகையிலும் பொது வெளியில் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
ஆணவக் கொலைகள் தொடர்பாக தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்கிற அளவிற்கு ஆணவக் கொலைகள் ஆதிக்க சிந்தனை படைத்தவர்களால் கொடூர மனம் படைத்தவர்களால் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டிலும் இது தொடர்பாக தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் இப்படிப்பட்ட மோசமான படுகொலைகளை ஆதரிக்கிற வகையில் அது ஒரு கோபத்தில் செய்யப்படுகிறது என அதை நியாயப்படுத்துகிற வகையிலும் அதை ஊக்குவிக்குற வகையிலும் பேசுகிறார்.
இப்படிப்பட்ட படுகொலைகளை நியாயப்படுத்தி மேலும் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு கருத்துகளை வெளியிட்டு வருவது என்பது அதுவும் பொது வெளியில் வெளியிட்டு வருவது மிகவும் மோசமான செயலாகும்.
ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிற சமூகங்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சட்டத்திற்கு புறம்பான வகையில் பேசி வரும் ரஞ்சித் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறை உயரதிகாரிகளும் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சசிகலா சுற்றுப்பயணம் : நெல்லை அதிமுகவினர் போலீஸில் புகார்!
சுதந்திர தின லீவுக்கு ஊருக்கு போறீங்களா?… அப்போ இத மறக்காம படிங்க!
Comments are closed.