இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகியதை அடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்று (ஜூலை 20) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி காலை 10.35 மணியளவில் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் வாக்கெடுப்பு தொடங்கியது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் தேர்தலை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் 223 உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
மஹிந்த ராஜபக்சே, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சே, முன்னாள் அமைச்சர் நமல் ராஜபக்சே ஆகியோரும் நாடாளுமன்றம் வந்து தங்களது வாக்குகளை செலுத்தினர்.
பதிவான 223 வாக்குகளில் 4 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 12 மணி அளவில் 219 வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இதில் 134 வாக்குகளைப் பெற்று ரணில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் களமிறங்கிய டலஸ் அழகப்பெரும 82 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். 3ஆவது வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கே 3 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
ராஃபிக்