தமிழ்நாட்டுக்கு மோடி, அமித் ஷா போன்ற பாஜகவின் முக்கியப் பிரமுகர்கள் வரும்போது அவர்கள் முன்னிலையில் சில பிரபலங்கள் பாஜகவில் இணைவது வழக்கமாகவே உள்ளது.
அந்த வகையில் இன்று ( நவம்பர் 12) மத்திய உள்துறை அமைச்சர் முன்னிலையில் சில புள்ளிகள் பாஜகவில் இணைவார்கள் என்று காலையில் இருந்தே தகவல்கள் பறந்துகொண்டிருக்கின்றன. அவர்களில் முன்னணி டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளாரும், கல்வி ஆலோசகருமான ரமேஷ் பிரபா இன்று அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் சேர இருப்பதாக சமூக தளங்களில் தகவல்கள் கசிந்தன.
ரமேஷ் பிரபா பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சன் டிவியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக தனது ஊடக பயணத்தைத் தொடங்கிய ரமேஷ் பிரபா பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானார். லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு, சமையல் நிகழ்ச்சிகள் என சன் டிவியில் முத்திரை பதித்த ரமேஷ் பிரபா மாணவர்களுக்கான கல்வி ஆலோசகராகவும் விளங்குகிறார்.
தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது, 12 ஆம் வகுப்புக்குப் பின்னர் மாணவர்கள் உயர் கல்வியை தேர்ந்தெடுப்பது பற்றிய சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களையும் வழிகாட்டுதல்களையும் அளித்து வந்தார் ரமேஷ் பிரபா.
கலைஞர் டிவி தொடங்கப்பட்டபோது சன் டிவியில் இருந்து சென்று கலைஞர் டிவிக்கு நிகழ்ச்சிகளை தயாரித்து வந்தார். 2012 முதல் 13 வரை கலைஞர் டிவியின் தலைவராகவும் இருந்தார்.
இந்த பின்னணியில் தமிழகத்தில் அறிவு சார்ந்த செயல்பாட்டாளரும், மாணவர்களிடையே செல்வாக்கு பெற்றவருமான ரமேஷ் பிரபாவை பாஜகவில் இணைக்கும் முயற்சியாக அவரிடம் பேசப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் இன்று அமித்ஷா முன்னிலையில் ரமேஷ் பிரபா பாஜகவில் சேர இருப்பதாக தகவல்கள் கசிந்தன.
ரெட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்தவரான ரமேஷ் பிரபாவை பெரம்பலூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளராக களமிறக்க தயாராகிவிட்டார்கள் என்பது வரையிலும் பாஜகவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ரமேஷ் பிரபாவையே தொடர்புகொண்டு கேட்டபோது, “பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் இன்றைக்கு இல்லை” என்று பதிலளித்தார்.’
–வேந்தன்
தீவாக மாறிய சந்தோஷ் நாராயணன் வீடு!
அனைத்துக்கட்சிக் கூட்டம்: நிறைவேறிய தீர்மானம் என்ன?