இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற வைப்பதும், தோல்வியடைய வைப்பதும் சாதி மத வாக்குகளா அல்லது அரசியல் கட்சி வாக்குகளா என வேட்பாளர்களை அச்சம் அடைய வைத்துள்ளது தொகுதியின் நிலைமை.
ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ள இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் 11,68,884 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி புதுக்கோட்டை மாவட்டத்திலும், திருச்சுழி சட்டமன்றத் தொகுதி விருதுநகர் மாவட்டத்திலும், பரமக்குடி, திருவாடனை, முதுகுளத்தூர், இராமநாதபுரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் இராமநாதபுரம் மாவட்டத்திலும் அமைந்துள்ளது.
இந்தத் தொகுதியில் முக்குலத்தோர், பட்டியலினத்தவர் (தேவேந்திர குல வேளாளர்), நாடார், இஸ்லாமியர்கள், மீனவர்கள் மற்றும் யாதவ சமூகத்தினர் வாக்குகள் கணிசமாக இடம் பெற்றுள்ளனர்.
2024 இல் நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.நவாஸ்கனி ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் இரட்டை இலை சின்னத்திலும், பாஜக கூட்டணி வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக பலா பழம் சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரபிரியா மைக் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரபிரியா, அதிமுக ஜெயபெருமாள், பாஜக கூட்டணி வேட்பாளர் ஓ.பி.எஸ் ஆகிய மூவரும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி இஸ்லாமியர்.
அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் முக்குலத்தோர் வாக்குகளை சிதறாமல் வாங்கினால் வெற்றி பெற்று விடலாம் என்று கணக்கு போட்டு வருகிறார். கூடுதலாக பட்டியலினத்தவர், யாதவர், மீனவர்கள் வாக்குகளை கணிசமாக பெறுவதற்காக அண்டர்கிரவுண்டு வேலைகளையும் செய்து வருகிறார்.
ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆதரவோடு முக்குலத்தோர் வாக்குகளை ஒட்டுமொத்தமாகப் பெற்று வெற்றி பெற்றாக வேண்டும் என்று கடுமையாக முயற்சித்து வருகிறார். அவர் யாதவர் சமூகத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்கு பாஜக உதவி செய்து வருவதாகவும், மேலும் அவர் திமுக அமைச்சர் ராஜகண்ணப்பனின் உறவினர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டதாகச் சொல்கிறார்கள் ஒபிஎஸ் ஆதரவாளர்கள்.
திமுகவின் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.நவாஸ்கனி இஸ்லாமியர், கிறித்தவர், மீனவர்கள் மற்றும் பட்டியலினத்தவரின் வாக்குகளை ஒருங்கிணைத்து வருகிறார். கூடுதலாக முக்குலத்தோர் வாக்குகளையும் யாதவர் வாக்குகளையும் சொற்ப அளவில் வாங்கினால் போதும் என்று பரபரப்பாக வேலை செய்து வருகிறார். விட்டமின் ப-வுக்கும் பஞ்சம் இல்லாமல் வாரி இறைத்து வருகிறார்.
கூட்டணிக் கட்சியான திமுக அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், நவாஸ்கனிக்கும் எப்போதும் ஏழாம் பொறுத்தம் என்றே சொல்ல வேண்டும். எனவே உயரும் ஏணியை எப்போது இழுத்து விடுவாரோ என்ற அச்சத்தில் இருக்கும் நவாஸ்கனி, அமைச்சரின் கருணைக்கு காத்திருக்கிறார், அதேவேளையில் திமுக தலைமையிடமும் அமைச்சர் ராஜகண்ணப்பன் அடிக்கடி சைலன்ட் மோடுக்கு போய்விடுகிறார் என்றும் தகவல் கொடுத்து வருகிறாராம்.
அமைச்சர் ராஜகண்ணப்பனோ அமைச்சர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள யாதவர் வாக்குகளைப் பெறுவதற்கு முயற்சி செய்து வருகிறார். ஆனால் யாதவர் வாக்குகள் பாஜக கூட்டணி வேட்பாளர் ஒபிஎஸ்-க்கு போகும் என தகவல் கேட்டு அப்செட் ஆனவர் பட்டியலினத்தவர் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறாரம்.
தொகுதியில் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் ஒன்று சேர்ந்து ஊர் ஊராகச் சென்று, ஊர் கூட்டம் போட்டு, அதிமுக வேட்பாளர், பாஜக கூட்டணி வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆகிய மூவரும் முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு நமது வாக்குகள் போகக்கூடாது, நமது வாக்குகள் நமது தொப்புள்கொடி உறவான நவாஸ்கனிக்கு ஏணி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று ஓட்டுகளை ஒன்றிணைத்து வருவதால் நவாஸ்கனி தனது வெற்றி மீது நம்பிக்கை வைத்துள்ளார்.
ஒபிஎஸ் முக்குலத்தோர் வாக்குகளை சிதறாமல் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்து பலா பழத்தை பாதுகாக்க வேண்டும் என்ற பதட்டத்தில் உள்ளார், அதிமுக வேட்பாளர் பலா பழத்தைக் கூர் போட்டு இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொள்ள போராடி வருகிறார்.
மீனவ சமூகத்தினரோ இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கொடுமைப்பட்டு சிறைபட்டு வருவதற்கு நிரந்தரமான தீர்வுக்கு போராடி வருகின்றனர்.
-வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பக்கத்துக்கு பக்கம் மாநில உரிமைகள்…காங்கிரஸ் தேர்தல் அறிக்கை…வரலாறு மாறியது எப்படி?
சிறையிலிருந்தே காய் நகர்த்தும் செந்தில் பாலாஜி…திணறவைக்கும் விஜயபாஸ்கர்…சூடுபிடித்துள்ள கரூர் களம்!
நெருங்கும் தேர்தல் : தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஐடி ரெய்டு!
மகளிருக்கு வருடம் 1 லட்சம் ரூபாய் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்!