தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேருவின் உடன் பிறந்த தம்பியான ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி காலை வாக்கிங் சென்ற போது கொல்லப்பட்டார்.
பத்து ஆண்டுகள் முடிவடைந்தபோதும் ராமஜெயம் கொலை வழக்கில் இன்னமும் யார் குற்றவாளிகள் என்ற கேள்விக்கு விடை தேடிக் கொண்டே இருக்கிறார்கள் போலீசார்.
சிபிஐ விசாரணை பிறகு சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை என்று நகர்ந்து வரும் இந்த வழக்கில்… கடந்த சில மாதங்களாக விசாரணை வேகம் பிடித்து வருகிறது.
சிறப்பு புலனாய்வுக் குழு எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராமஜெயம் கொலை வழக்கு குறித்து பல்வேறு சிறைகளில் இருக்கும் ரவுடிகளிடம் விசாரணை நடத்திய போலீசார் அவர்களில் 12 ரவுடிகளுக்கு சம்மன் அனுப்பி கோர்ட்டில் ஆஜர் படுத்தி அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டனர்.
இதன் அடிப்படையில் இன்று நவம்பர் 1ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் 12 ரவுடிகள் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களுக்காக சுமார் 80 வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் திரண்டனர். இதனால் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் சிறப்பு புலனாய்வு எஸ்பி ஜெயக்குமார் இன்று நீதிமன்றத்துக்கு வராததால் வழக்கு விசாரணை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழக பாஜகவின் ஐடி விங் சமூக ஊடக பிரிவு மாநில தலைவரான சி.டி.ஆர். நிர்மல் குமார் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் குருபூஜை அன்று தனது ட்விட்டர் பக்கத்தில்,
“ராமஜெயம் வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்காக சம்மன் அனுப்பப்பட்ட 12 பேரும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அமைச்சர் நேரு ஏற்கனவே கூறியது போல யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாக்கும் பாணியில் தற்போது கேட்க நாதியற்று இருக்கும் முக்குலத்தோர் சமுதாயம் பலி கடாவா?”என்று ஒரு பதிவிட்டார்.
இது அந்த சமுதாயத்தினர் மத்தியிலும் போலீசார் மத்தியிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
நிர்மல் குமாரின் இந்த ட்விட் குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, “சம்மன் அனுப்பப்பட்ட 12 பேர்களில் ஐந்து பேர்கள் தான் நிர்மல் குமார் குறிப்பிட்ட அந்த சமுதாயத்தினர். அவர்களைத் தவிர பிற சமுதாயத்தினரும் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சமுதாய ரீதியாக இந்த பட்டியல் தயாரிக்கப்படவே இல்லை. விசாரணை ரீதியாகத்தான் தயாரிக்கப்பட்டுள்ளது” என்கிறார்கள்.
பிறகு திடீரென ராமஜெயம் கொலை வழக்கில் பாஜகவின் சமூக ஊடக பிரிவு தலைவர் இப்படி ஒரு சாதிய சர்ச்சையை கிளப்புவதன் பின்னணி என்ன என்று டெல்டா பாஜக வட்டாரங்களில் விசாரித்தோம்.
“பாஜகவின் டெல்டா பிரமுகரான கருப்பு முருகானந்தம் அண்மையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கவனத்துக்கு சில விஷயங்களை கொண்டு சென்றுள்ளார். ராமஜெயம் கொலை வழக்கில் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்கள் என்று நிர்மலா சீதாராமன் கவனத்திற்கு கருப்பு முருகானந்தம் கொண்டு செல்ல இது பற்றி நிர்மல் குமாரிடம் தெரிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன். இதையடுத்து தான் அப்படி ஒரு ட்விட்டர் பதிவை தமிழக பாஜகவின் சமூக ஊடகப்பிரிவு தலைவரான நிர்மல் குமார் பதிவிட்டுள்ளார். யார் என்ன சொன்னாலும் பாஜக மேலிடத்தினர் நம்பி விடுகிறார்கள்” என்கிறார்கள் பாஜக நிர்வாகிகளே.
வேந்தன்
கள நிலவரம் தெரியாமலேயே தலைவர்கள் பேசுவதுதான் கேலிக்கூத்து…