கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் யாரும் பொது இடங்களில் கோபப்படக்கூடாது என்றும், பாமக இளைஞரணி தலைவராக, தான் அறிவித்தபடி முகுந்தன் நீடிக்கிறார் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நீதி கேட்டு இன்று (ஜனவரி 2) பாமக தலைவர் அன்புமணியின் மனைவியும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி வேட்பாளராக போட்டியிட்டவருமான பசுமைத் தாயகம் தலைவர், சௌமியா அன்புமணி தலைமையில் பாமக மகளிர் அணியினர் போராட்டம் நடத்தினார்கள். இதற்கு போலீஸ் அனுமதி மறுத்து சௌமியா உள்ளிட்டோரை கைது செய்தது.
இந்த பரபரப்பு காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில்… தைலாபுரத்தில் தனது தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
அப்போது பத்திரிகையாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தவர்,
“கட்சியின் தலைவர், நிறுவனர் போன்ற உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கோபப்படாமல் நடந்து கொள்ள வேண்டும். சாந்தமாக பதில் சொல்ல வேண்டும். திமுகவும் பாமகவும் கூட்டணியில் இருந்தபோது கலைஞரிடம் பத்திரிகையாளர்கள் ஒரு கேள்வி கேட்டனர்.
‘கூட்டணியில் இருந்து கொண்டே டாக்டர் ராமதாஸ் உங்களை தினமும் விமர்சிக்கிறாரே?’ என்ற கேள்விக்கு கலைஞர், ‘தைலாபுரத்திலிருந்து எனக்கு தினமும் தைலம் வருகிறது’ என்று பதில் கூறினார். இவ்வாறு நளினமாகவும் நாகரிகமாகவும் பதில் அளிப்பதற்கு கலைஞரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
அன்புமணியுடன் பொதுக்குழுவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பற்றி கேட்டதற்கு,
‘அன்புமணி உடன் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தது. அதற்குப் பிறகு அவர் இங்கே வந்து பேசினார். எல்லாம் சரியாகிவிட்டது’ என்று பதிலளித்தார் டாக்டர் ராமதாஸ்.
பாமகவின் இளைஞர் அணி தலைவராக முகுந்தன் நீடிக்கிறாரா என்ற கேள்விக்கு,
“பாமக மாநில இளைஞர் அணித் தலைவர் பொறுப்பில் முகுந்தன் நீடிக்கிறாரா என்ற பேச்சுக்கே இடமில்லை. அதில் எந்தவித மாற்றமும் இல்லை. பொதுக்குழு முடிந்த மறுநாளே அவருக்கு நியமனக் கடிதமும் டைப் அடித்துக் கொடுத்து விட்டேன். முகுந்தனை இளைஞர் அணித் தலைவராக நியமித்ததில் எவ்வித மாற்றமுமில்லை” என்று தெரிவித்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.
கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் முகுந்தனை பாமக இளைஞரணி தலைவராக டாக்டர் ராமதாஸ் அறிவித்ததும், அருகே அமர்ந்திருந்த அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி அதற்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது டாக்டர் ராமதாஸ், ‘இது நான் நிறுவிய கட்சி. இங்கு நான் சொல்வதுதான் நடக்கும். பிடிக்கவில்லை என்றால் வெளியே போ’ என்று கடுமையாக பதில் அளித்தார்.
இது சர்ச்சையான நிலையில் தான் இப்போது முகுந்தன் பாமக இளைஞரணி தலைவர் பதவியில் தொடர்வதாக அறிவித்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.
இதற்கு அன்புமணியின் ரியாக்ஷன் என்ன என்பதில் அடுத்த கட்ட பரபரப்பாக இருக்கிறது பாமக.
வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…