கர்நாடக மாநிலத்தில் பட்டப்படிப்பை முடித்து 6 மாதங்கள் வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு தொடங்கியிருக்கிறது.
அதேபோல தமிழகத்திலும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜனவரி 14) வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக மாநிலத்தில் படித்து பட்டம் பெற்று 6 மாதங்களாகியும் வேலை பெறாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 வீதமும், பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,500 வீதமும் வழங்கப்படுகிறது.
ஓர் இளைஞர் பட்டம் பெற்று 6 மாதங்களில் ஏதேனும் வேலைவாய்ப்போ, உயர்கல்வி பயிலும் வாய்ப்போ கிடைக்காதபோது அவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும்.
இது படித்த இளைஞர்களின் எதிர்காலத்தை சிறப்பாக்கும் நோக்குடன் சரியான நேரத்தில், சரியான முறையில் செய்யப்படும் உதவியாகும்.
ஆனால், தமிழ்நாட்டில் 17 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின்படி மொத்தமாகவே 55 ஆயிரம் பேருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் 70 லட்சம் பேரில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவு ஆகும்.
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் 2006-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்குப் பிந்தைய 17ஆண்டுகளில் உதவித்தொகை உயர்த்தப்பட வில்லை.
அப்போது அறிவிக்கப்பட்ட அதே ரூ.600 தான் இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் கூட பல்வேறு காரணங்களைக் காட்டி கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.
படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவி என்பது அவர்களின் உயர்வுக்கும், வேலைவாய்ப்புக்கும் உதவுவதாக இருக்க வேண்டும்.
அதற்கேற்ற வகையில் கர்நாடகத்தில் இருப்பது போன்று இத்திட்டத்திற்கான நிபந்தனைகளை தளர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
அத்துடன் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தோருக்கு ரூ.1,000, தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.2,000, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கும், பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கும் தலா ரூ.3,000, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.4,000, பட்டமேற்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.5,000 வீதம் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்; அதன்மூலம் படித்த இளைஞர்களின் வாழ்வில் தமிழக அரசு ஒளி விளக்கேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மணிப்பூரில் யாத்திரை தொடங்கியது ஏன்?: ராகுல்காந்தி விளக்கம்!
புதிய கல்வி கொள்கையை பின்பற்றும் தமிழக அரசு: அடித்து சொல்லும் அண்ணாமலை