தமிழ் மொழியில் கடைகளுக்கு பெயர் வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் மொழியில் கடைகளுக்கு பெயர் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று (மார்ச் 26) சென்னை பாண்டிபஜாரில் அக்கட்சியினர் கடைகளில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “சென்னையிலிருந்து மதுரைக்கு 8 நாட்கள் தமிழை தேடி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டேன். எங்கும் தமிழ் மொழியை காணவில்லை. கடைகளில் தமிழ் மொழியில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தோம்.
ஒரு மாத காலத்திற்குள் கடைகளில் தமிழ் பெயர் வைக்கவில்லை என்றால் கருப்பு மை, வாளி, ஏணியோடு நாங்கள் வருவோம். வணிகர்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அனைவரும் தமிழர்கள். தமிழ் வளர வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தமிழ் அழிவின் விளிம்பில் இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் தமிழ் மொழி இருக்காது.
நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆங்கில கலப்பு சொற்களை பயன்படுத்தி நாம் நம்முடைய தமிழ் மொழியை அழித்து கொண்டிருக்கிறோம். வணிகர்கள் பிற மொழி கலப்பில்லாமல் தமிழ் மொழியில் கடைகளுக்கு பெயர் வைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
செல்வம்