வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஸ்டாலினுக்கு மனம் வரவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தருமபுரியில் நேற்று (மார்ச் 29) பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் “சமூகநீதி குறித்த பாமக கோரிக்கைகளை பிரதமர் மோடி ஏற்றுக்கொள்வாரா? அதற்கான உத்தரவாதத்தை மோடியிடமிருந்து பாமக பெற்றிருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதற்கு பதிலளித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (மார்ச் 30) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கூட்டணி கட்சிகளுக்கு திமுக உத்தரவாதம் அளித்ததா?
“தமிழ்நாட்டை ஆறாவது முறையாக ஆட்சி செய்யும் திமுகவை வழிநடத்திச் செல்லும் ஸ்டாலின், இப்படி வினா எழுப்பும் அளவுக்குத் தான் அரசியல் புரிதல் இருப்பது வருத்தமளிக்கிறது.
தமிழ்நாட்டில் திமுக 6 முறையும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தான் ஆட்சி அமைத்திருக்கிறது. அப்போதெல்லாம் கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்றித் தருவோம் என்று கூட்டணி கட்சிகளுக்கு உத்தரவாதம் அளித்ததா?
5 முறை தேசியக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மத்திய அரசில் அங்கம் வகித்தது. அந்த 5 முறையும் திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் தொடர்பாக காங்கிரசிடமிருந்தும், பாஜவிடமிருந்தும் உத்தரவாதம் பெற்றதா? என எனக்குத் தெரியவில்லை.
நாடாளுமன்றத் தேர்தல்களில் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் போது, தேர்தலுக்குப் பிறகு மத்தியில் தேசியக் கட்சி ஆட்சி அமைக்க மாநிலக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படும். அப்போது, மாநிலக் கட்சிகள் முதன்மைக் கோரிக்கைகளை முன்வைக்கும். அவற்றை உள்ளடக்கிய குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டம் உருவாக்கப்பட்டு, அதனடிப்படையில் தான் மத்திய அரசு செயல்படும். இது தான் இயல்பு. முதலமைச்சர் அளவுக்கு உயர்ந்துவிட்ட தம்பி ஸ்டாலினுக்கு இது தெரியாதது வருத்தமளிக்கிறது.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக நீதிபதி ரோகிணி ஆணையத்தை அமைத்து, அதன் அறிக்கையை பெற்ற பிரதமர் மோடி, இக்கோரிக்கையையும் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதிக் கொள்கைகளில் பாமக உறுதியுடன் போராடும்.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காதது ஏன்?
இது ஒருபுறம் இருக்க, சமூகநீதி குறித்தெல்லாம் பேசுவதற்கு தமக்கு தகுதி இருக்கிறதா? என்று ஸ்டாலின் தனக்குத் தானே வினா எழுப்பி விடை காண வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக அளித்த உத்தரவாதத்தை இரு ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றினோமா? என்பதை நேர்மையுடனும், மனசாட்சியுடனும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 3 முறை சாதிவாரி வாக்கெடுப்பு நடத்தும் வாய்ப்புகளை உருவாக்கியது பாமக. ஆனால், அந்த வாய்ப்புகளை கலைத்து வீணடித்தது திமுக அரசு தான்.
சமூகநீதிக்கு எதிராக இத்தனை துரோகங்களை செய்துவிட்டு, சமூகநீதி குறித்தெல்லாம் திமுக பேசுவது முரண்பாட்டின் உச்சமாகும். இந்தியாவின் 6 மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் அளவு 75% ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கூறுகின்றன.
திமுக கூட்டணி அமைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் கூறுகிறார். ஆனால், ஸ்டாலின் மட்டும் மத்திய அரசு தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மீண்டும், மீண்டும் கூறுகிறார். இதற்கு காரணம் அவரது அறியாமை அல்ல, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் வன்னியர் உள்ளிட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு விடக் கூடாது என்ற வன்மம் தான் காரணம். இதை ஸ்டாலின் மனசாட்சி ஒப்புக்கொள்ளும்.
வன்னியர்களை ஸ்டாலின் ஏமாற்ற முடியாது!
தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இன்றுடன் 2 ஆண்டுகள் முடிகின்றன. தமிழ்நாடு அரசு நினைத்திருந்தால் வன்னியர்களின் கல்வி, வேலைவாய்ப்பு நிலை குறித்த தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கியிருக்க முடியும்.
இதற்காக ஸ்டாலினை நானே நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். எட்டு முறை அவருக்கு கடிதம் எழுதினேன். அன்புமணி ராமதாஸ் தலைமையிலான குழுவினர் 3 முறை முதலமைச்சரை சந்தித்து இட ஒதுக்கீட்டு கோரிக்கையை வலியுறுத்தினர். பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் அடங்கிய குழுவினர் 50 முறைக்கும் கூடுதலாக அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சந்தித்து வன்னியர் இட ஒதுக்கீட்டை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
ஆனால், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதில் ஒரு துளி கூட முன்னேற்றம் ஏற்படவில்லை. ஸ்டாலின் நினைத்திருந்தால் வன்னியர்களுக்கு எப்போதோ இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், பிற சமூகங்களின் கோரிக்கைகளைக் கேட்டுக் கேட்டு நிறைவேற்றும் ஸ்டாலினுக்கு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மட்டும் மனம் வரவில்லை.
ஆனால், மேடைகளில் மட்டும் சமூகநீதியில் அக்கறைக் கொண்டவர் போல நடிக்கிறார். ஸ்டாலினுக்கு சமூகநீதியில் உண்மையாகவே அக்கறை இருந்தால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கி விட்டு, தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி விட்டு, அதன்பிறகு சமூகநீதி பற்றி பேச வேண்டும்.
ஒருவரை ஒரு முறை ஏமாற்றலாம்… சிலரை சில முறை ஏமாற்றலாம். ஆனால், வன்னியர்களை ஒவ்வொரு முறையும் ஏமாற்ற முடியாது. வன்னியர் சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக திமுகவுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டனர். அதை திமுக விரைவில் உணரும்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
GOLD RATE: சட்டென குறைந்தது விலை… சவரன் எவ்வளவுன்னு பாருங்க!
”திருமாவளவனுக்கு ஆதரவாக பாஜக…” -அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி