Agni Kalasam Removed at tiruvanamalai

அக்கினி கலசம் சின்னம் அகற்றம் : ராமதாஸ் ஆவேசம்!

அரசியல்

திருவண்ணாமலை அக்கினி கலசம் சின்னம் அகற்றப்பட்டது கண்டிக்கத்தக்கது, மீண்டும் வைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (மார்ச் 10) வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை அடுத்த நாயுடுமங்கலம் கூட்டு சாலையில், 1989ம் ஆண்டு அக்னி கலச சின்னம் வன்னியர் சங்கத்தால் அமைக்கப்பட்டு, அதை நான் திறந்து வைத்து கொடியேற்றினேன். அது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் புனித அடையாளமாக போற்றப்பட்டு வந்தது. அதனால் யாருக்கும், எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இரண்டு வருடங்களாக தொடரும் பேச்சுவார்த்தை!

சில ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப் பட்ட போது, அக்கினிக் கலச சின்னத்தை தற்காலிகமாக அகற்றலாம் என்றும், பணிகள் நிறைவடைந்த பிறகு அங்கு அச்சின்னத்தை மீண்டும் அமைக்கலாம் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது.

அதற்கு பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் ஒப்புக்கொண்ட நிலையில், அங்கிருந்து தற்காலிகமாக எடுக்கப்பட்ட சின்னம், பின்னர் மாவட்ட நிர்வாகத்தால் மீண்டும் வைக்கப்பட்டது.

அதன்பின் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் அக்கினிக் கலச சின்னம் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மீண்டும் அங்கிருந்து அகற்றப்பட்டது. அதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடுமையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அகற்றப்பட்ட அக்கினிக் கலச சின்னத்தை மீண்டும் அமைப்பது தொடர்பாக திருவண்ணாமலை வட்டாட்சியர் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் இடையே தொடர்ந்து பேச்சுகள் நடைபெற்றன. ஆனால் சிக்கலுக்கு தீர்வு காண எந்த முயற்சியும் செய்யவில்லை.

சின்னம் அகற்றம்… பா.ம.க.வினர் கைது!

அக்கினிக் கலசம் அகற்றப்பட்டு இரு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், பா.ம.க.வினரும், வன்னியர் சங்கத்தினரும் புதிதாக அமைக்கப்பட்ட அக்கினிக்கலச சின்னத்தை நாயுடு மங்கலம் கூட்டு சாலையில் இன்று அதிகாலையில் அமைத்தனர்.

உடனடியாக அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அக்கினிக் கலச சின்னத்தை வலுக்கட்டாயமாக அகற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி பா.ம.க.வினரையும் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

இரு ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த மாவட்ட நிர்வாகம் இப்போது மட்டும் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்ட அக்கினிக் கலச சின்னத்தை ஒரு சில நிமிடங்களில் அகற்றியது ஏன்? யாரை திருப்திப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கைகளைக் கட்டிக் கொண்டு கட்டளைகளை நிறைவேற்றுகிறது? என்பதையெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விளக்கியாக வேண்டும்.

வன்னியர் சமுதாயத்திற்கு எதிராக அரசு?

திருவண்ணாமலை, நாயுடுமங்கலம் உள்ளிட்ட இடங்களில் தொடங்கி மாவட்டம் முழுவதும் விதிகளுக்கு மாறாக  பல்வேறு சிலைகள் அமைக்கப்பட்டன. அவற்றையெல்லாம் மாவட்ட நிர்வாகம் கைக்கட்டி வேடிக்கைப் பார்க்கிறது.

ஆனால், யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத அக்கினிக் கலச சின்னத்தை மட்டும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மீண்டும், மீண்டும் அகற்றுகிறது என்றால், மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் வன்னியர் சமுதாயத்திற்கு எதிராக செயல்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும்.

அக்கினிக் கலசம் அகற்றப்பட்ட விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக பொறுமையுடனும், பொறுப்புடனும் செயல்பட்டு வருகிறது. அதை பலவீனமாக மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் கருதினால் அவர்களுக்கு எவ்வாறு பாடம் புகட்ட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்.

எனவே, வன்னிய மக்களின் உணர்வுகளை மதித்து, நாயுடுமங்கலம் கூட்டு சாலையில் அக்கினிக் கலச சின்னத்தை மீண்டும் அமைக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என்று எச்சரிக்கிறேன்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஜாபர் சாதிக்… திமுக எச்சரிக்கை!

போதைப்பொருளை தடுக்க நடவடிக்கை: ஆளுநரிடம் எடப்பாடி மனு!

+1
0
+1
2
+1
1
+1
1
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *