தமிழக முதல்வர் ஸ்டாலினை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (டிசம்பர் 29) சந்தித்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி மனு வழங்கினார். மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை, ராமதாஸ் சந்தித்திருப்பது தமிழ்நாடு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இன்று (டிசம்பர் 29) காலை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். இந்த சந்திப்பு சுமார் 35 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி , அரசு தரப்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டி மனு அளித்தார் ராமதாஸ். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் மற்றும் தேவை குறித்து முதல்வரிடம் ராமதாஸ் விளக்கினார் என்று பாமக தலைமை தெரிவித்துள்ளது.
ராமதாஸ் கொடுத்த மனுவில், சமூகநீதியின் தொட்டிலான தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும்; அந்த வாய்ப்பை பிகார், கர்நாடகம், ஒடிஷா, ஆந்திரம் போன்ற மாநிலங்களிடம் நாம் இழந்து விட்டோம் என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அதன் விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
அதற்காகவாவது தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த அரசு முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், “தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 20 மாதங்கள் ஆகும் நிலையில், அதற்கான சட்ட முன்வரைவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
சமூக நிலை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்றும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்ததாக பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
விஜயகாந்த் மறைவு: துக்கத்தில் பங்கெடுக்க சொன்ன மோடி… கிளம்பி வந்த நிர்மலா சீதாராமன்
சொந்த இடத்தில் கேப்டன் உடல் அடக்கம்- சட்ட சிக்கலா?