பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை, திருப்பூர் மாவட்ட நிர்வாகங்களை கூண்டோடு கலைத்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (ஆகஸ்டு 30) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது சமூகதளப் பக்கத்தில் டாக்டர் ராமதாஸ்,
“கோவை, திருப்பூர் வருவாய் மாவட்டங்களில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் விடுவிக்கப்படுகிறார்கள். அந்த மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தலைவர், செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்று அறிவிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பாமக வட்டாரங்களில் விசாரித்தபோது,
“பாமகவைப் பொறுத்தவரை கோவை 5 மாவட்ட அமைப்புகள், திருப்பூர் 3 மாவட்ட அமைப்புகளாக இருக்கின்றன. இந்த 8 மாவட்ட நிர்வாகிகளில் 5 மாவட்ட தலைவர்கள் மீது கடந்த 6 மாத காலத்துக்கு மேலாக கடுமையான புகார்கள் ராமதாசுக்கு சென்றன.
திருப்பூர், கோவையில் உள்ள நிறுவனங்களை மிரட்டி பணம் சம்பாதிக்கிறார்கள் என்றும், கட்டப் பஞ்சாயத்து செய்து பணம் ஈட்டுகிறார்கள் என்றும் இந்நிர்வாகிகள் மீது புகார்கள் சென்றன.
அதுமட்டுமல்ல… கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இம்மாவட்ட பாமக நிர்வாகிகள் திமுகவிடம் பணம் வாங்கிக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வேலை செய்யாமல் அமைதியாக இருந்துவிட்டார்கள் என்று பாஜக தரப்பில் இருந்தும் டாக்டர் ராமதாஸுக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்துதான் ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகிகளும் கூண்டோடு கலைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த மாவட்டங்கள் மட்டுமல்ல… பாமக வலுவாக இருக்கும் வட தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்ட அமைப்புகள் உட்பட இன்னும் பல மாவட்ட அமைப்புகளை கலைக்க இருக்கிறார் ராமதாஸ்.
மாவட்ட தலைவர், செயலாளர்களுக்கு பதில் தொகுதி செயலாளர் பதவியை நியமிக்க திட்டமிட்டிருக்கிறார்” என்கிறார்கள் தைலாபுரம் வட்டாரங்களில்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் அமெரிக்க பயணம்… மாறும் ஷெட்யூல்? திமுகவில் பரபரப்பு!
உத்தரவை மீறினால் ஃபார்முலா 4 கார் ரேஸுக்கு ரெட் கார்டு: உயர்நீதிமன்றம் அதிரடி!