கடலூர் பாமக நிர்வாகி மீது தாக்குதல்…ராமதாஸ் கண்டனம்!

அரசியல்

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் சூரப்பன்நாயக்கன் சாவடி பகுதியை சேர்ந்தவர் பாமக நிர்வாகி சங்கர். கேபிள் டிவி தொழில் நடத்தி வரும் இவரை, நேற்று (ஜூலை 6) மர்மநபர்கள் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.

பலத்த காயத்துடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர  சிகிச்சை பெற்று வருகிறார் சங்கர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் ஐந்து பேரை இன்று (ஜூலை 7) கைது செய்தனர்.

இந்தநிலையில், பாமக நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜூலை 7) கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பாமக நிர்வாகி சங்கர் மீதான கொலைவெறித் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. உடல் முழுவதும் காயமடைந்துள்ள நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சங்கர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிர்வாகி மீதான தாக்குதலுக்கு காவல்துறையின் அலட்சியமும், செயலின்மையும் தான் காரணம் ஆகும். சங்கரின் சகோதரர் பிரபு மூன்றாண்டுகளுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த சிலரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அந்த வழக்கின் முக்கிய சாட்சியான சங்கரை நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியமளிக்கக் கூடாது என்று கொலையாளிகள் மிரட்டியுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் சங்கர் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததும், சங்கருக்கு பாதுகாப்பு வழங்கப்படாததும் தான் கொலை முயற்சி தாக்குதலுக்கு காரணம் ஆகும்.

கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் அதிமுக நிர்வாகி புஷ்பநாதன் என்பவர் சில நாட்களுக்கு முன்பு தான் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் அச்சத்திலிருந்து மக்கள் மீள்வதற்கு முன்பாகவே பாமக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி நடந்திருப்பது கடலூர் மாவட்ட காவல்துறையின் தோல்வியையே காட்டுகிறது.

தமிழகத்தில் அதிகரிக்கும் கொலைகள்!

இவ்வளவுக்குப் பிறகும் காவல்துறை அதன் தவறை ஒப்புக்கொள்ளாமல், கொலைமுயற்சிக்கு ஆளான சங்கரும், அவரை கொலை செய்ய முயன்றவர்களும் வன்னியர்கள் தான் என்று செய்திக்குறிப்பு வெளியிட்டு இந்த வழக்கின் தீவிரத்தை நீர்த்துப் போகச் செய்ய காவல்துறை முயல்வது அருவருக்கத்தக்க செயலாகும்.

சென்னையில் தொடங்கி நெல்லை வரை தமிழ்நாடு முழுவதும் அரசியல் கொலைகளும், கொலை முயற்சிகளும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகைய கொடூர நிகழ்வுகள் குறித்தெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரியுமா? என்றே தெரியவில்லை. அடுத்தடுத்து நடைபெற்று வரும் கொலைகளும், கொலைமுயற்சிகளும் தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது என்பதையே காட்டுகிறது.

தமிழக அரசும், காவல்துறையும் இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரை கொலை செய்ய முயன்றவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“ஜெய் பீம், வீரவணக்கம்”… போலீஸ் பாதுகாப்புடன் ஆம்ஸ்ட்ராங் உடல் ஊர்வலம்!

விக்கிரவாண்டி தேர்தல்: 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி… உதயநிதி பிரச்சாரம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *