அம்பேத்கர் சிலையை உடைக்க பாமக சதியா? – காவல்துறையை சாடும் ராமதாஸ்

அரசியல்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தில் செல்லத்துரை என்ற இளைஞர் தாக்கப்பட்ட சம்பவமும், விசிக, பாமக ஆகிய இரு கட்சிகளின் செயல்பாடுகளும் அம்மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், வட மாவட்டங்களில் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட திட்டம் தீட்டப்படுவதாக காவல்துறைக்கு அலர்ட் மெசேஜ் வந்தது. இதனையடுத்து பாமக ஆதரவு இயக்கமான சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவர் சிவப்பிரகாசத்தை போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதுதொடர்பாக மஞ்சக்கொல்லை – பாமக – விசிக மோதல்: நடந்தது என்ன? கிரவுண்ட் ரிப்போர்ட் என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் நேற்று (நவம்பர் 7) விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தநிலையில்,  தமிழ்நாட்டில் சாதிக்கலவரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் கடலூர் மாவட்டத்தில் அம்பேத்கரின் சிலைகளை உடைக்க பாமக திட்டமிட்டிருப்பதாக காவல்துறையினர் வதந்தி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (நவம்பர் 9) கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொய்யை சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்கடா போக்கத்த பசங்களா என்றொரு பழமொழி கிராமத்தில் கூறப்படுவதுண்டு. பாமகவுக்கு எதிரான கடலூர் மாவட்ட காவல்துறையினரின் பொறுப்பற்ற புளுகுகளைப் பார்த்தால் அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் இன்றுள்ள அரசியல் கட்சிகளில் அம்பேக்தரை கொள்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட முதல் கட்சி பாமக தான். தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட அம்பேத்கர் சிலைகளை திறந்து வைத்த தலித் இயக்கம் இல்லாத ஒரே கட்சி பாமக.

அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 7 இடங்களில் அம்பேத்கரின் சிலைகளை திறந்த ஒரே தலைவர் நான் தான். தைலாபுரத்தில் எனது இல்லம் அமைந்துள்ள வளாகத்தில் அம்பேத்கரின் சிலையை திறந்திருக்கிறேன்.

தமிழ்நாட்டில் அம்பேத்கரின் சிலையைக் கொண்டுள்ள ஒரே தலைவரின் இல்லம் எனது இல்லம் தான். தமிழ்நாட்டில் அம்பேத்கர் சிலை எங்கேனும் அவமதிக்கப்பட்டால் அதற்கான முதல் எதிர்ப்புக்குரல் வருவது என்னிடம் இருந்துதான்.

அத்தகைய தன்மை கொண்ட பாமக, அம்பேத்கரின் சிலைகளை உடைக்கப்போவதாகவும், அவமதிக்கப்போவதாகவும் காவல்துறையினர் கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விடுவது பொய்களை புனைவதில் கூட அவர்களுக்கு புத்தியில்லை என்பதையே காட்டுகிறது.

கடலூர் மாவட்ட காவல்துறையினரின் இத்தகைய மோசமான அணுகுமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது. கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த செல்லத்துரை என்ற பாமக தொண்டர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய விசிகவினர் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்ய காவல்துறையினரால் முடியவில்லை.

கடலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் வன்னிய சங்கத் தலைவர் அருள்மொழியின் தலையை வெட்டுவோம்.

இன்னும் 42 ஆண்டுகளுக்கு வன்னியர்களை நாங்கள் அடித்துக்கொண்டே இருப்போம். அதை அவர்கள் வாங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்று பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க காவல்துறையினருக்கு துப்பில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மஞ்சக்கொல்லை கிராம மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக சென்ற பாமக மாவட்டச் செயலாளர் செல்வமகேஷ் உள்ளிட்டோர் மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, இப்போது அடுத்தக் கட்டமாக அம்பேத்கர் சிலைகளை பாமக சேதப்படுத்தப்போவதாக அவதூறு பரப்பி வருகிறது.

அம்பேத்கர் சிலைகளை பாமகவினர் அவமதித்துவிட்டதாக அவதூறு பரப்புவது திமுகவினரின் பழைய பாணி. 1998ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்பாக, சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் தலித் எழில்மலையை வீழ்த்த வேண்டும் என்பதற்காக திண்டிவனத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுகவினரே செருப்பு மாலை அணிவித்து, பாமகவின் மீது பழிபோட்டனர்.

ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாத சிதம்பரம் தொகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்களும் பாமகவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தனர்.

திண்டிவனம் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து தண்டிக்கவேண்டும் என்று வலியுறுத்தி, நான் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினேன். இரு நாட்களுக்குப் பிறகு என்னை நேரில் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டதற்கு இணங்க உண்ணாநிலையை நான் கைவிட்டேன்.

அதைத் தொடர்ந்து அன்றைய முதலமைச்சர் கலைஞர், திண்டிவனத்தில் அம்பேத்கர் சிலைக்கு செருப்புமாலை அணிவிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்த திமுக அமைச்சரை அழைத்து கடுமையாக கண்டித்தார் என்பது அரசியல் வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும்.

25 ஆண்டுகளுக்கு முன் திமுக கையாண்ட மலிவான உத்தியை இப்போது, கடலூர் மாவட்ட காவல்துறை கையாள்வது வருத்தம் அளிக்கிறது. சற்றும் பொருத்தமற்ற வகையில் அடிமுட்டாள்தனமாக அவதூறுகளை பரப்புவதை காவல்துறை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பாமக பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக இப்படியொரு அவதூறைப் பரப்பும் காவல்துறை கடந்த காலங்களில் செய்யப்பட்டது போன்று திட்டமிட்டு அம்பேத்கர் சிலையை அவமதித்துவிட்டு, அந்தப் பழியை பாமகவினர் மீது போடுவதற்கு தயங்காது.

எனவே, கடலூர் மாவட்டம் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்பேத்கரின் சிலைகளுக்கு விருப்புவெறுப்பற்ற, நடுநிலையான காவல்துறை உயரதிகாரிகளின் கண்காணிப்பில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் முடக்கம்: லிஸ்ட் போட்ட எடப்பாடி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *