சமூகநீதி வேடம் போடும் திமுக: ராமதாஸ் காட்டம்!

அரசியல்

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஏப்ரல் 11) வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில், கடந்த மார்ச் 29-ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மோடியிடம் உத்தரவாதம் பெற்றாரா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ராமதாஸ், “ஸ்டாலினுக்கு சமூக நீதியில் உண்மையான அக்கறை இருந்தால் வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திவிட்டு சமூகநீதி பற்றி பேச வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுகவுக்கு விருப்பமில்லை என்று ராமதாஸ் மீண்டும் இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை அளிக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு முதன்முதலில் வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

அதன் பின் இரு முறை நீட்டிக்கப்பட்ட தலா 6 மாத காலக் கெடுவும் இன்றுடன் நிறைவடைகிறது. ஆனாலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த 31.03.2022-ஆம் நாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தமிழக அரசு நினைத்திருந்தால் அடுத்த இரு வாரங்களில் இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம்.

ஆனால், அதன்பின் 9 மாதங்கள் கழித்து நவம்பர் 17-ஆம் தேதி தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்பின் இரு மாதங்கள் கழித்து 12.01.2023-ஆம் நாள் தான் வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி ஆணையம் 3 மாதங்களுக்குள், அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ஆம் நாளுக்குள் பரிந்துரை செய்திருக்க வேண்டும். ஆனால், அதன்பின் இரு முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவும் இன்றுடன் நிறைவடைந்து விட்டது. ஒட்டுமொத்தமாக 15 மாதங்களாகியும் ஆணையம் எதையும் செய்யவில்லை; ஆணையம் கேட்ட தரவுகளையே தமிழக அரசு தரவில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீடு குறித்த தரவுகளை ஆய்வு செய்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பது கடினமல்ல. அது ஒரு சில வாரங்களில் முடிவடையக் கூடிய பணி தான்.

ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு விரும்பவில்லை. சமூகநீதி வேடம் போடும் திமுகவின் உண்மை முகம் சமூக அநீதி தான் என்பதற்கு இதுதான் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையைக் கடந்து போராடித் தான் இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க வேண்டும் என்றால் அதற்கும் பாமக தயாராகத்தான் இருக்கிறது. இதை உணர்ந்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரமலான் பண்டிகையில் உச்சம் தொட்ட தங்கம்!

தமிழகத்தில் களைகட்டிய ரமலான்: மசூதிகளில் சிறப்பு தொழுகை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0