ஊழல் குற்றச்சாட்டை கூறுவது ராமதாஸுக்கு கைவந்த கலை. அவருக்கு வேறு வேலை கிடையாது என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ’அதானி தமிழ்நாட்டில் யாரை வந்து சந்தித்தார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறாரே?’ என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “அவருக்கு வேறு வேலையில்லை. அவர் தினமும் ஒரு அறிக்கை கொடுப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஓகே” என்று கோபமாக பதிலளித்து சென்றார்.
இதற்கு பாமக தலைவர் அன்புமணி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “முதல்வர் யாரையும் தரக்குறைவாக பேசும் நபர் அல்ல என்பது மக்களுக்கு தெரியும். தமிழக அரசு என்றைக்கும் திறந்த புத்தகம். நாங்கள் தவறு செய்யவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
காமாலை கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாக தெரியும். அதுபோல எடுத்ததற்கெல்லாம் ஊழல் குற்றச்சாட்டை கூறுவது ராமதாஸுக்கு கைவந்த கலை. ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதைத் தவிர ராமதாசுக்கு வேறு வேலை எதுவும் கிடையாது” என்று தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி குறித்து பேசுகையில், “எங்கு இறப்பு நடந்தாலும் அரசை குறை சொல்வதைத் தவிர பழனிசாமிக்கு வேறு வேலை கிடையாது. திமுக ஆட்சியில் போலீசாரால் துன்புறுத்தப்பட்டு யாரும் இறந்த நிகழ்வு நடக்கவில்லை. அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் நடந்தது அனைவருக்கும் தெரியும். அனைத்தையும் மறந்துவிட்டு பழனிசாமி பேசி வருகிறார். பழனிசாமிக்கு ஞாபக மறதி அதிகம். தனது ஆட்சிக்காலத்தை அவர் எண்ணிப் பார்த்து அவர் பேசினால் நன்றாக இருக்கும்” என்று ரகுபதி கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா