வன்னியர் சங்கத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குருவின் 6 ஆவது நினைவு தினம் இன்று (மே 25) பாமகவினராலும் குருவின் ஆதரவாளர்களாலும், பல்வேறு வன்னியர் அமைப்புகளாலும் அனுசரிக்கப்படுகிறது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “வன்னியர் சங்கத்தின் தலைவராகவும், எனது தீவிர விசுவாசியாகவும் வாழ்ந்த மாவீரன் ஜெ.குருவை இன்று தான் இயற்கை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டது. அவர் இந்த மண்ணை விட்டு மறைந்திருக்கலாம். ஆனால், என் மனதை விட்டு மறையவில்லை. அவரை நான் நினைக்காத நாளில்லை. எனது கட்டளைப்படி கட்சிக்காகவும், சமூகத்திற்காகவும் அவர் ஆற்றிய அரும்பணிகள் மறக்க முடியாதவை. மாவீரன் ஆற்றிய பணிகளையும், செய்த தியாகத்தையும், காட்டிய வீரத்தையும் இந்நாளில் மட்டுமின்றி, எந்நாளும் நினைவு கூர்வோம்; போற்றுவோம்.
காடுவெட்டியில் உள்ள நினைவு மண்டபத்திலும், திண்டிவனம் கோனேரி குப்பத்தில் கல்விக்கோயில் வளாகத்தில் உள்ள மாவீரனின் உருவச்சிலைக்கும் அங்குள்ள பராமரிப்பாளர்கள் மூலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டிருக்கிறது. கல்விக் கோயில் வளாகத்தில் உள்ள மாவீரனின் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு இன்று மாலை நான் மரியாதை செலுத்துகிறேன். இந்த நாளில் அனைவரும் மாவீரனுக்கு மரியாதை செலுத்துங்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பாமக தலைவரான அன்புமணி இன்று தனது இல்லத்தில் தனது மனைவியும், தர்மபுரி பாமக வேட்பாளருமான சௌமியாவுடன் இணைந்து காடுவெட்டி குருவின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து அவர், “மருத்துவர் அய்யா அவர்களின் மனதில் நிறைந்தவர் மாவீரன் ஜெ.குரு. மறக்க முடியாத மனிதர். வன்னியர் சங்கத் தலைவருமான மாவீரன் ஜெ.குரு நம்மை பிரிந்து சென்று ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன. அவரது மறைவும், பிரிவும் ஒவ்வொரு நாளும் நம்மை வாட்டுகின்றன. மருத்துவர் அய்யா அவர்களின் மனதையும், குறிப்பையும் அறிந்து களப்பணியாற்றியவர். பாட்டாளி மக்கள் கட்சியை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்த வேண்டும் என்பதையே தமது வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டவர் மாவீரன். அது தான் அவரது கனவு. மாவீரனின் அந்தக் கனவை நனவாக்க கடுமையாக உழைக்க இந்த நாளில் உறுதியேற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.,
பாமக நிர்வாகிகள் இன்று மாலை காடுவெட்டி குருவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்குத் திட்டமிட்டுள்ளனர்.
இதேநேரம் காடுவெட்டி குருவின் ஆதரவாளர்கள் சமூக தளங்களில் பாமக தலைமை மீது குரு மறைவு தொடர்பாக விமர்சனங்களையும் வைத்து வருகிறார்கள்.
–வேந்தன்
போக்குவரத்து vs போலீஸ் : முதல்வர் உத்தரவு…இரு துறை செயலாளர்கள் ஆலோசனை!
6ஆம் கட்ட தேர்தல்… 25.76% வாக்குப்பதிவு : வாக்களித்த அரசியல் தலைவர்கள்!