ராஜ்யசபா சீட்… யாருடன் பேச்சுவார்த்தை?: ராமதாஸ் பேட்டி!

Published On:

| By Kavi

ராஜ்யசபா சீட் தொடர்பாக இனி திமுகவிடம் பேசமாட்டோம் என்று ராமதாஸ் கூறியுள்ளார். Rajya Sabha seat ramadoss interview

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (மார்ச் 13) தைலாபுர தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர்,  “திமுக தனது வாக்குறுதிகளை செயல்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டது. பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதிலும்  தோல்வி அடைந்துவிட்டது.  நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில் என்ன திட்டங்களை அறிவிக்கும், அவற்றை எப்போது எப்படி செயல்படுத்தும்” என்று கேள்வி எழுப்பினார். 

அவரிடம்  ராஜ்ய சபா எம்.பி. சீட்டுகள் காலியாகவுள்ளது.  பாமக சார்பில் என்ன கோரிக்கை வைக்கவுள்ளீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு ராமதாஸ், ”நீங்கள் கொஞ்சம் சிபாரிசு செய்யுங்கள்” என்று செய்தியாளர்களிடம் கிண்டல் செய்தார். 

அதற்கு செய்தியாளர்கள் யாரிடம் சிபாரிசுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க,  “அது ரகசியம். நாங்கள் திமுகவிடம் கேட்கமாட்டோம். கட்சி செயற்குழு பொதுக்குழு கூடிதான் முடிவு செய்ய முடியும். தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது” என்று கூறினார். 

திமுகவிடம் கேட்க மாட்டோம் என்று ராமதாஸ் கூறியிருக்கும் நிலையில், அதிமுகவிடம் கேட்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன. 

முன்னதாக ராஜ்யசபா சீட் தொடர்பாக பாமக கௌரவ தலைவர் ஜி. கே. மணி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய சேலம் இல்லத்துக்கே சென்று சந்தித்தார்.

அவர்,   ’2021 தேர்தலில் அதிமுக- பாமக கூட்டணியில் ஆறு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். அதிமுகவிடம் தற்போது 62 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாமகவின் 6 பேரைச் சேர்த்தால், மொத்தம் 68 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூலம் இரண்டு ராஜ்யசபா எம்பிக்களை நாம் தாராளமாக தேர்ந்தெடுத்து அனுப்பலாம். அந்த வகையில் நீங்கள் எங்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி மீண்டும் ராஜ்யசபா எம்பி ஆவதற்கு உதவ வேண்டும்’ என எடப்பாடியிடம் கோரிக்கை வைத்துள்ளார் ஜி. கே. மணி. 

இதுதொடர்பாக நமது மின்னம்பலத்தில்  டிஜிட்டல் திண்ணை: ராஜ்ய சபா யாருக்கு? எடப்பாடியின் ரகசிய கூட்டணி வியூகம்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. Rajya Sabha seat ramadoss interview  

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share