மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி-யும் மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கை எண் 222-ல் இருந்து கட்டுக்கட்டாக பணம் எடுக்கப்பட்டதாக சபாநாயகர் ஜெகதீப் தன்கர் இன்று (டிசம்பர் 6) தெரிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடும் அமளிக்கு மத்தியில் நடந்து வருகிறது. இந்தநிலையில், இன்று காலை 11 மணிக்கு அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் மாநிலங்களவையில் சபாநாயகர் ஜெகதீப் தன்கர் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அதாவது… “நேற்றைய தினம் (டிசம்பர் 5) அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்ட பிறகு மாநிலங்களவை முழுவதும் வழக்கமான பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டது. அப்போது காங்கிரஸ் எம்பியும் மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 222-ல் இருந்து கட்டுக்கட்டாக பணம் எடுக்கப்பட்டது. இந்த விவகாரம் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. உடனடியாக இதுதொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
ஆனால், தனது இருக்கையில் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அபிஷேக் மனுசிங்வி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எனது இருக்கையில் பணம் கைப்பற்றப்பட்டதாக சபாநாயகர் கூறியது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. நேற்று மதியம் 12.57 மணிக்கு நான் மாநிலங்களவைக்குள் சென்றேன். அவை மதியம் ஒரு மணிக்கு தொடங்கியது.
அவை தொடங்கியதும் ஒத்திவைத்து விட்டார்கள். மதியம் 1 முதல் 1.30 மணி வரை நாடாளுமன்றத்தில் உள்ள கேண்டீனில் அயோத்யா பிரசாத்துடன் மதிய உணவு சாப்பிட்டேன். மொத்தமாக நேற்று வெறும் 3 நிமிடங்கள் மட்டுமே மாநிலங்களவையில் இருந்தேன்” என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.பி இருக்கையில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தேசிய அரசியலில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
செல்வம்
ஆம்னி பேருந்துகள்: விதிகளை மீறினால் சிறை!
சீனியர் சிட்டிசன்களுக்கான ரயில் கட்டணச் சலுகை: மீண்டும் வர வாய்ப்பே இல்லை!
Comments are closed.