மீண்டும் ராஜ்யசபா… புத்தாண்டில் வைகோ அளித்த பதில்: ஸ்டாலின் நிலை என்ன?

Published On:

| By Aara

ஒவ்வொரு புத்தாண்டின் தொடக்க தினமான ஜனவரி 1ஆம் தேதி அன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அக்கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை தாயகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுவதோடு பத்திரிகையாளர்களுக்கு விருந்து உபசரிப்பு செய்வார்.

அந்த வகையில்  இன்று  (2025 ஜனவரி 1)  காலை சென்னை தாயகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் வைகோ.

அப்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட், நெய்வேலி அனல் மின் நிலையம், தேனி நியூட்ரினோ உள்ளிட்ட விவகாரங்களில் மதிமுக வின் சட்ட ரீதியான, கள ரீதியான போராட்டங்கள் பற்றி நீண்ட நேரம் விளக்கினார்.

“திமுகவில் இருந்து நான் வெளியேறவில்லை, வெளியேற்றப்பட்டேன்.. அதெல்லாம் கடந்து வந்து விட்டேன். இப்போது தமிழ்நாட்டில் திராவிட இயக்கமான திமுகவை காப்பாற்றுவதற்கு ஒரு தோளாக திராவிடர் கழகமும், இன்னொரு தோளாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகமும் இருக்கும். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக இருநூறு தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறும். திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்தவிதமான நெருடலும் இல்லை. முதல்வர் ஸ்டாலின் மிக கவனமாக செயல்பட்டு வருகிறார். திமுக ஆட்சிக்கு நான் உயிரோடு இருக்கும் வரை ஆபத்து வர விடமாட்டேன்” என்று பேசினார்.

அப்போது ஒரு செய்தியாளர், “திமுக கூட்டணியில் உங்களுக்கு அளிக்கப்பட்ட ராஜ்ய சபா உறுப்பினர் பதவி வரும் ஜூன் மாதத்தோடு முடிவடைகிற நிலையில்… மீண்டும் உங்களுக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி திமுகவிடம் கேட்பீர்களா?”  என்று கேட்டார்.

இதற்கு வைகோ ஒரே வரியில்,  “எதுவும் நான் கேட்க மாட்டேன்”  என்று பதிலளித்தார்.

மேலும்,  “மதிமுகவின் பம்பரம் சின்னத்தை மீட்டெடுக்கும் வகையில் கூட்டணியில் அதிக இடங்கள் கேட்பீர்களா?” என்ற கேள்விக்கு… ‘தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கு. இப்பவே ஏன்?” என்று கேட்டார் வைகோ.

செய்தியாளர் சந்திப்பு முடிந்த பிறகு மதிமுகவின் முக்கிய நிர்வாகிகளிடம் வைகோவின் ராஜ்யசபா சீட் பற்றி பேசினோம்.

“2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடனான பேச்சுவார்த்தையின் போது மதிமுகவுக்கு ஒன் பிளஸ் ஒன்… அதாவது  ஒரு மக்களவைத் தொகுதி ஒரு மாநிலங்களவை தொகுதி என ஒப்பந்தத்தில் எழுத்து பூர்வமாக பதிவு செய்யுமாறு நாங்கள் கோரிக்கை வைத்தோம்.

எங்கள் பொதுச் செயலாளர் வைகோவுக்கு 2019 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ராஜ்ய சபா உறுப்பினர் பதவி காலம் 2025 ஜூன் மாதத்தோடு முடிவடைகிறது.  அந்நிலையில் மீண்டும் அவருக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை வழங்க வேண்டும் என்பதற்காக தான் இந்த கோரிக்கையை நாங்கள் அப்போதே வைத்தோம்.

அப்போது திமுக பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றிருந்த கட்சியின் பொருளாளர் டி ஆர் பாலு, ‘அதுக்கு  என்ன அவசரம்? 2025 ஜூன்லதானே வைகோவுடைய ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் முடிகிறது. அதை அப்போது பார்த்துக்கலாம். உங்க தலைவருக்கு கொடுக்காம இருப்போமா? அத பத்தி  ஒர்ரி பண்ணிக்காதீங்க. ஆனால் ஒப்பந்தத்தில் வேண்டாம்’ என சொல்லிவிட்டார். வைகோவுக்கு மீண்டும் ராஜ்யசபா சீட்  பெறுவதில் உறுதியாக இருக்கிறோம். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் இதில் கறார் காட்ட மாட்டார் என்றே நினைக்கிறோம்” என்றனர்.

வைகோவுக்கு  மீண்டும் ராஜ்யசபா சீட் குறித்து திமுக என்ன நினைக்கிறது? திமுக வட்டாரத்தில் பேசினோம்.

“2019 ஆம் ஆண்டிலேயே மாநிலங்களவைக்கு வைகோ செல்ல வேண்டும் என்பதற்காகவே  எங்கள் தலைவர் ஸ்டாலின் விரும்பி அந்த முடிவை எடுத்தார். 2025 ஜூன் மாதம்தான்  வைகோவின்  ராஜ்யசபா பதவி முடிகிறது. அப்போது அவர் மீண்டும் ராஜ்யசபா செல்ல விரும்புகிறாரா, அவரது உடல் நலம் அதற்கு இடம் கொடுக்கிறதா என்ற காரணிகளை எல்லாம் வைத்துதான் முடிவெடுக்க முடியும்.  அந்த ஒரு இடம் என்பது வைகோவுக்காகத்தானே தவிர, மதிமுகவில் வேறு யாருக்காகவும் அல்ல.  அதனால்தான் 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது ஒன் பிளஸ் ஒன்  என்ற எழுத்து ரீதியான ஒப்பந்தம் வேண்டுமென மதிமுக கோரியபோதும் நாங்கள் ஏற்கவில்லை. எனவே இந்த விவகாரத்தில் முடிவெடுக்க இன்னும் ஆறு மாதங்கள் இருக்கின்றன. ஸ்டாலின் நல்ல முடிவாக எடுப்பார்” என்கிறார்கள்.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

அம்மாவின் அரவணைப்பு-  அமிர்த ஆசிரமத்தில் அண்ணாமலை

நடிகர் மாதவன் வாங்கிய 14 கோடி படகு: நயன்தாரா துபாய் சென்றது ஏன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share