ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து 6 பேரும் நேற்று சிறையிலிருந்து விடுதலையானார்கள். நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
நேற்று தனது இல்லத்தில் நளினி செய்தியாளர்களை சந்தித்தார்.
சோனியா காந்தி குடும்பத்தின் உதவி!
அப்போது பேசிய அவர், ” எனக்கு விடுதலை வழங்கிய நீதிபதிகளுக்கும், என்னுடைய விடுதலைக்காக முயற்சி செய்த அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் உதவி செய்யவில்லை என்றால், என்னால் சிறையிலிருந்து விடுதலை ஆகியிருக்க முடியாது.
என்னுடைய வழக்கறிஞர்களுக்கு இந்த வழக்கை நடத்த நான் 5 பைசா கூட கொடுத்தது கிடையாது. ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தின் போது, இறந்த காவல்துறை அதிகாரிகளுக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சோனியா காந்தி குடும்பம் எனக்கு உதவி செய்துள்ளது. சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரை நான் சந்திக்க வாய்ப்பில்லை.
பிரியங்கா காந்தி என்னை சிறையில் சந்தித்த போது, அவர் பத்திரமாக வீடு போய் சேர வேண்டும் என்று நான் விரதம் இருந்தேன்.
ஆளுநர் எப்படி விடுதலை வாங்கி தருவார்?
முன்னாள் பிரதமரை கொலை செய்தவரை விடுதலை செய்கிறார்கள் என்று சிலர் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். அனைவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. அனைவரும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதை தவறு என்று நினைக்கிறேன். செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்து வந்தேன்.
இந்த தருணத்தில், மத்திய மாநில அரசுகளுக்கு எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக ஆளுநர் காவல்துறையில் பணியாற்றியவர். ராஜீவ் கொலை வழக்கில் 7 போலீசார் இறந்துள்ளனர். அப்படி இருக்கும்போது, அவர் எனக்கு எப்படி விடுதலை வாங்கி கொடுப்பார்?
சிறைச்சாலை : நரகமா? பல்கலையா?
நான் சிறையில் இருக்கும் போது மன அமைதியின்மையால் இருந்தேன். சிறைச்சாலை அனுபவம் என்பது நரகம், சாக்கடை, புதைகுழி, சுடுகாடு, போன்று தான் இருந்தது.
வழக்கை நடத்த என்னிடம் பணம் இல்லாததால் மிகவும் அவதிப்பட்டேன். உடுத்த துணி இல்லாததால் பழைய துணிகளை உடுத்தியிருக்கிறேன்.
சிறைச்சாலை ஒரு பல்கலைக்கழகம். அங்கு நான் நிறைய படிப்பினைகளை கற்றிருக்கிறேன். பொறுமை, நிதானம், மரியாதை, ஆகியவற்றை அங்கு தான் நான் கற்றுக்கொண்டேன்.
இங்கிலாந்து செல்ல திட்டம்!
நான் குற்றவாளி இல்லை. குற்றம் செய்திருந்தால் என்னால் தூங்க முடியாது. உயிருடன் இருந்திருக்க முடியாது.
நான் என்னுடைய முயற்சியை கைவிடவில்லை. எனக்கு மனதில் எந்த பயமும் கிடையாது. நான் யார் என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும்.
தமிழக மக்கள் மீது எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது. அவர்கள் என்னை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள்.
நான் என்னுடைய குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க வேண்டும். பொது வாழ்க்கைக்கு நான் வர மாட்டேன்.
எனது கணவர் மற்றும் மகளுடன் இங்கிலாந்தில் குடியேற திட்டமிட்டுள்ளேன். தமிழக அரசு எனக்கு பரோல் வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் . சிறையில் இருந்த போது வெளியில் என்ன நடக்கிறது என்று எனக்கு எதுவும் தெரியாது. யாரும் எங்களுக்கு எந்த தகவலும் சொல்ல மாட்டார்கள்.
சிறையில் அழகுக்கலை மற்றும் டெய்லரிங் படிப்பு கற்றுக்கொண்டேன்.
சிறையில் நான் யாருடனும் பழக மாட்டேன். எனக்கு ஆன்மிகத்தில் மிகவும் ஈடுபாடு உள்ளது. யோகா வகுப்பில் நான் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்து கொள்வேன்.
சிறையில் ஜக்கி வாசுதேவ் 10 நாட்கள் யோகா வகுப்பு எடுத்தார். அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
பேரறிவாளன் விடுதலையால் கஷ்டப்பட்டேன்!
பேரறிவாளனும் நானும் வழக்கிலிருந்து விடுதலையாவதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வந்தோம். எழுவர் விடுதலையை நோக்கி தான் இந்த வழக்கு செல்கிறது என்று நினைத்தோம் . முதலில் அவர் ஒருவர் மட்டும் விடுதலையானதால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.
இப்போது நான் விடுதலையானதும் எனது அம்மா, மகள் ஆகியோர் மிகவும் சந்தோஷப்பட்டனர்.
மேலும், 32 வருடம் சிறையில் கழிந்து விட்டது. அதன்பிறகு என்ன சந்தோஷம் இருக்கிறது.
மனதில் மகிழ்ச்சி இல்லை!
எனது கணவர் முருகன், 6 பேரும் விடுதலை ஆனது பெரிய அதிசயம் என்று என்னிடம் சொன்னார். இன்னும் கூட சில நாட்கள் சிறையில் இருப்பேன் என்று அவர் நினைத்ததாக என்னிடம் தெரிவித்தார்.
ஆனால், நான் சந்தோஷப்படும் மனநிலையில் இல்லை. திருச்சியில் உள்ள சிறப்பு முகாமிற்கு எனது கணவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதால், மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
அவரை தமிழக அரசு சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்து எனது மகளுடன் அவரை சேர்த்து வைக்க வேண்டும்.
எனது கணவர் முருகன் என்னை மகாராணி, நீ யாரிடமும் கை ஏந்தக் கூடாது, நான் உன்னை பார்த்துக்கொள்வேன் என்று என்னிடம் சொல்வார். அவர் இருக்கும் போது எனக்கு எந்த கவலையுமில்லை” என்று நளினி தெரிவித்தார்.
செல்வம்
சென்னையில் விடிய விடிய மழை: அதிகபட்சமாக 7.4 செ.மீ பதிவு!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க..!