ரவிக்குமார் rajinikanth the anti hero who renounced politics
வழமையான நாயகனின் பண்புகளுக்கு மாறாக அதற்கு எதிரான குணங்களைக் கொண்டு ஒரு படைப்பின் நாயகனாக முன்வைக்கப்படுகின்ற பாத்திரத்தை எதிர் நாயகன் ( anti hero) என்று குறிப்பிடுவார்கள். இலக்கியத்திலும், திரைப்படத்திலும் பயன்படுத்தப்பட்டு பல வெற்றிகளை அது கொடுத்திருக்கிறது. காஃப்காவின் விசாரணை, ஆல்பெர் காம்யுவின் அந்நியன், ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் முதலான நாவல்கள் இலக்கியத்தில் கவனத்தை ஈர்த்த எதிர்நாயகப் பாத்திரங்களைக் கொண்டவை எனக் கூறலாம்.
அதுபோலவே திரைப்படங்களிலும் நன்மை செய்வது அல்லது நன்மைக்காகப் பாடுபடுவது என்ற பண்புகளின்றி வில்லன்களின் பண்புகளோடு எதிர் நாயகர்களை முதன்மைப் பாத்திரமாகக்கொண்டு பல திரைப்படங்கள் உருவாகியிருக்கின்றன. கேப்டன் ரஞ்சன் ( சந்திரலேகா) , எம்ஜிஆர் ( நீரும் நெருப்பும்) முதலானோரை முன்வைத்து சிறு சிறு அளவில் அது தமிழ் சினிமாவில் முயற்சித்துப் பார்க்கப்பட்டது என்றாலும் எதிர் நாயகன் பாத்திரத்தை வெற்றிக்கானதாக மாற்றிக்காட்டியவர் ரஜினிகாந்த் என்று சொல்லலாம்.
கே.பாலச்சந்தரால் அவர் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட அபூர்வராகங்கள், அடுத்ததாக மூன்று முடிச்சு ஆகிய திரைப்படங்களிலும், 16 வயதினிலே, காயத்ரி ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்த அவர் தப்புத்தாளங்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, முள்ளும் மலரும் முதலான படங்களில் எதிர் நாயகன் பாத்திரங்களை ஏற்றார். அவற்றுக்குக் கிடைத்த வரவேற்பே அவரைத் தமிழ் திரைப் படங்களில் கதாநாயகனாக உயர்த்தியது.
கதாநாயகனாகப் பல படங்களில் நடித்தார் என்றாலும் பாட்சா, சந்திரமுகி ஆகியவற்றில் அவர் ஏற்றிருந்த எதிர் நாயகன் பாத்திரங்களே அவற்றை மிகப்பெரிய வெற்றிப்படங்களாக மாற்றின.
இலக்கியத்திலும் திரைப்படங்களிலும் எதிர் நாயகர்களை மக்கள் ரசித்தாலும் அரசியலில் அத்தகையவர்களை மக்கள் ஆதரித்ததில்லை. ஆனால், திரைப்படத்தில் பெற்ற வெற்றியை மனதில்கொண்டு ரஜினி அரசியலிலும் அதை முயற்சித்து பார்க்க விரும்பினார். 2021 ஜனவரியில் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்தார்.
அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என அறிவிப்பதற்கு முன்பாக அவர் தமிழக அரசியல் களத்தில் இரண்டு பாத்திரங்களில் நடித்திருந்தார். ஒன்று இமயமலைக்கும், ராமகிருஷ்ணா மடத்துக்கும் போன ஆன்மிக பாத்திரம், மற்றொன்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை ஆதரித்த வில்லன் பாத்திரம். இந்தக் கலவை அரசியலில் ஒரு ஹீரோவாக அல்ல, ‘ஆன்ட்டி ஹீரோ’வாகவே அவரை அடையாளப்படுத்தியது.
‘எதிர்நாயகன்’ ரஜினிகாந்த்துடன் ஆரம்பகாலப் படங்களில் இணைந்து நடித்த கமல்ஹாசன் அரசியலிலும் அவரோடு சேர்ந்து தோன்ற வாய்ப்பிருந்தது. அதிமுக உடைந்து ஒரு பிரிவு அவரோடு கூட்டணி சேர்ந்தாலும் வியப்பில்லை எனப் பேசப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘எதிர் நாயகன்’ ரஜினிகாந்துக்கு தமிழக மக்கள் ஆட்சி அதிகாரத்தைக் கொடுக்கப் போகிறார்களா அல்லது அவர் நடித்த பாபா படத்துக்குக் கொடுத்ததைப்போல மிகப்பெரிய தோல்வியைப் பரிசளிக்கப் போகிறார்களா என்ற கேள்வியோடு நாம் காத்திருந்தபோது ‘ அரசியலுக்கு வரவில்லை’ என ரஜினி அறிவித்தார்.
“ கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. கட்சி ஆரம்பிப்பேன் என்று நம்பிய ரசிகர்கள், மக்களுக்கு என் முடிவு ஏமாற்றம் தரும். தேர்தல் அரசியலுக்கு வராமல் என்னால் என்ன செய்யமுடியுமோ அதனை செய்வேன். நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை. ரசிகர்களும், மக்களும் என்னை மன்னிக்க வேண்டும்” என 2020 டிசம்பர் மாத இறுதியில் வெளியான அவரது அறிக்கை தெரிவித்தது. அவரது உடல் நலத்தைப்பற்றிக் கவலைகொண்டவர்களுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டின் எதிர்காலத்தின்மீது அக்கறை கொண்டவர்களுக்கும் அது நிம்மதியைத் தந்தது.
ரஜினியின் பிறந்தநாளான இன்று அவரைப்போலவே வேடம் தரித்த ரசிகர்கள் சிலர் அவரைப் பார்ப்பதற்காக அவரது வீட்டின் முன்னே கூடியிருந்த காட்சியை ஊடகங்களில் பார்க்க முடிந்தது. அவர்கள் ரஜினியின் ’காட்சி அரசியல்’ காவுகொண்ட பலிகள்.
’காட்சி அரசியல்’ என்பது தன்னைப் பற்றியே பேசும், தன் புகழையே பாடும், வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அதிகாரத்துவத்தை ஊக்குவிக்கும். மக்களின் விழிப்புணர்வை சிதறடித்து அவர்களை உணர்வற்ற மயக்கநிலையில் வைக்கும். பிம்பங்களே காட்சி அரசியலின் மூலதனக் குவியல். அது குடிமக்களை ரசிகர்களாக்கி முகமற்ற கும்பலாகத் திரட்டும். நாயக வழிபாடு என்னும் பித்தேறிய அந்தக் கும்பல் ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகாரத்துக்கு வழிகோலும்.
அரசியலைத் துறப்பதென்னும் துணிச்சலான முடிவை எடுத்ததுபோல ரஜினி இன்னொரு முடிவையும் எடுக்கவேண்டும் – கமர்ஷியல் சினிமாவைத் துறக்கும் முடிவுதான் அது. அவருக்கு நல்ல சினிமா எதுவெனத் தெரியும். அதுபோல ஒரு படத்தையாவது அவர் தமிழ்நாட்டு மக்களுக்குக் கொடுக்கவேண்டும். திறமை வாய்ந்த ஒரு கலைஞனாக அவர் தமிழ்நாட்டுக்குச் செய்யும் கைமாறு அதுவாகத்தான் இருக்கும்.
ரஜினிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்டுரையாளர் குறிப்பு:
முனைவர் டி.ரவிக்குமார் – நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் தொகுதி), எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
ஸ்டார் ஃபர்ஸ்ட் சிங்கிள்: காலேஜ் சூப்பர்ஸ்டாராக கலக்கும் கவின்
மழை, வெள்ள பாதிப்பு: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவ முகாம்!
rajinikanth the anti hero who renounced politics
அவரோட பாதையிலேயே போய் பிறந்தநாளில் ரஜினியை பழிக்காமல் அதே சமயம் புகழாமல் உள்ளதை இடித்துக்கூறி அடுத்த கட்ட சினிமா யோசனையும் கூறினீர்கள். ரஜினியின் சிறந்த பிறந்த நாள் வாழ்த்து இதுவாக தான் இருக்கும்.