புதிய இந்தியா பிறக்க வேண்டிக் கொள்கிறேன் : இமயமலை செல்வதற்கு முன் ரஜினி பேட்டி!

Published On:

| By indhu

மீண்டும் மத்தியில் மோடி வருவாரா? என்ற கேள்விக்கு அரசியல் சம்மந்தப்பட்ட கேள்வி வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் இன்று (மே 29) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட அதாவது 7ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜூன் 4ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மத்தியில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மோடி பிரதமராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பிரதமராக யார் பதவியேற்பார் என்பது குறித்து ஜூன் 1ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கேள்வி வேண்டாம் 

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையம் செல்ல காரில் புறப்பட்ட போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்திடம், “மீண்டும் மத்தியில் மோடி ஆட்சிக்கு வருவார் என்று நினைக்கிறீர்களா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “சாரி, அரசியல் தொடர்பான கேள்விகள் வேண்டாம்” என பதிலளித்தார்.

தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “ஆன்மிகம் மிக முக்கியமான ஒன்று. இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் ஆன்மிகம் தேவைப்படுகிறது.

என்னுடைய முதல் இமயமலை பயணத்தில் புது அனுபவம் கிடைத்ததால் ஒவ்வொரு வருடமும் செல்கிறேன். ஆன்மீகம் என்றாலே சாந்தி, சமாதானம் அவ்வளவுதான்” என்றார்.

தொடர்ந்து, புதிய இந்தியா பிறக்குமா? என்ற கேள்விக்கு “புதிய இந்தியா பிறக்க கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இமயமலைக்கு ஆன்மீக பயணம் புறப்படுவதற்கு முன்னதாக ரஜினிகாந்த் இவ்வாறு பேட்டி அளித்தார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜாமீனை நீட்டிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் : மீண்டும் திகார் செல்லும் கெஜ்ரிவால்?

அண்ணா… நோ கமெண்ட்ஸ்… : இசையா? பாடலா? குறித்த கேள்விக்கு ரஜினி பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel