சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷை நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் ரூ3,300 கோடி மதிப்பிலான திட்டத்தில் ரூ.371 கோடி ஊழல் செய்ததாக ஆந்திர சிஐடி காவல் துறை அவரை செப்டம்பர் 9-ஆம் தேதி கைது செய்தது. சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் ராஜமகேந்திரவரம் சிறையில் உள்ளார்.
இந்தநிலையில் சந்திரபாபு நாயுடு கைதுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யான் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க சென்றபோது அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் தரையில் படுத்து தர்ணா போராட்டம் செய்தார். தெலுங்கு நடிகரும் ஹிந்துபுர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நந்தமுரி பாலகிருஷ்ணா சந்திரபாபு நாயுடு கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தசூழலில் சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷூக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.
லோகேஷிடம் பேசிய ரஜினி, “என்னுடைய நண்பர் சந்திரபாபு நாயுடு ஒருபோதும் தவறு செய்ய மாட்டார். பொய் வழக்குகள் மூலம் சட்டத்திற்கு புறம்பாக கைது செய்வது அவரை எந்தவகையிலும் பாதிக்காது. மக்களுக்கு அவர் செய்த நல்ல திட்டங்கள் அவரை வெளியே கொண்டு வர உதவும்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரம் மாதம் விஜயவாடாவில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சி நிறுவன தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவ் நூற்றாண்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
இந்தநிகழ்ச்சியில் அவர் பேசியபோது, “ஆந்திர மாநிலத்தை வளர்சியடைந்த மாநிலமாக மாற்றுவதற்கான தொலைநோக்கு திட்டத்தை சந்திரபாபு நாயுடு மேற்கொண்டுள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத் கட்டமைப்பு வளர்ச்சிக்கு இவரது பங்கு முக்கியமானது” என்று தெரிவித்திருந்தார்.
சந்திரபாபு நாயுடுவை பற்றி நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்து பேசியதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
அடுத்த சர்ச்சை : சனாதன எதிர்ப்பு பற்றி பேச மாணவிகளுக்கு அழைப்பு!
இசைக்கச்சேரியில் பங்கேற்காதவர்களுக்கு பணம் திருப்பி செலுத்தப்படும்: ஏசிடிசி நிறுவனர்