நடிகர் ரஜினிகாந்தை தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று (செப்டம்பர் 2) சந்தித்து பேசியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஆன்மீக சுற்றுப்பயணம் சென்றார். இந்த பயணத்தின் போது ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தபிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜன்சத்தாதல் லோக்தண்ட்ரிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ரகுராஜ் பிரதாப் சிங் உள்ளிட்டோரை சந்தித்தார்.
இதையடுத்து பெங்களூரு சென்ற அவர் அங்குள்ள ராகவேந்திரா கோவிலில் வழிபட்டார். பின்பு திடீரென்று தான் நடத்துநராக பணியாற்றிய போக்குவரத்து பணிமனைக்குச் சென்றார். அங்கிருந்த ஊழியர்களிடம் சில நிமிடங்கள் உரையாடி மகிழ்ந்தார்.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியில் அவரது சொந்த ஊரான நாச்சிக்குப்பம் கிராமத்திற்கு தன் அண்ணனுடன் சென்று, அவரது பெற்றோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இப்படி ரஜினிகாந்த் பல அரசியல் தலைவர்களைச் சந்தித்த நிலையில், தற்போது ரஜினியை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இன்று (செப்டம்பர் 2) சந்தித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஓ.பன்னீர் செல்வம், 1 மணி நேரத்திற்கும் மேலாக ரஜினியுடன் உரையாடினார். தொடர்ந்து பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை ரஜினி சந்தித்த சூழலில் இன்று நடைபெற்ற இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
1% இல்ல 30% கூடுதல் வாக்குகள் பெறுவேன்: சீமானுக்கு அண்ணாமலை சவால்!