“அப்பாவைச் சங்கி என்று சொல்கிறார்களே என கோபம் இருந்தது. ரஜினிகாந்த் சங்கி இல்லை. அவர் சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார்!” என்று லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநரும் நடிகர் ரஜினி அவர்களின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
ஐஸ்வர்யாவின் இந்தச் செய்தி நம்புதற்குரியதா இல்லையா என்பது பற்றி பலவிதமான கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ‘சங்கி’ என்ற அடையாளத்தை மரியாதைக்குரியதாக அவரும் கருதவில்லை என்பது வெளிப்பட்டிருக்கிறது.
உண்மைச் சங்கிகள் கூட பல சமயம் தங்களை மீறி தங்கள் அடையாளங்களை இழிவுபடுத்திக் கொள்வதுண்டு. பெரியாரை இழிவு படுத்துகிறேன் என்று காவித் துண்டு போடுவதும், காவிச்சாயம் ஊற்றுவதும் அத்தகைய நடவடிக்கைகள் தானே!
ரஜினியின் இமயமலைப் பயணங்கள் பற்றியெல்லாம் கவலைப்படாதவர்கள் கூட, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் எழுப்பப்பட்டுள்ள ராமர் கோவில் விழாவுக்குச் சென்றதை விரும்பவில்லை. எதிர்த்துக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
பாபர் மசூதி இடிப்பு விவகாரம் ரஜினிக்குத் தெரியாதா? மத நம்பிக்கை, பக்தி அடிப்படையில் உணர்ச்சிப் பெருக்கான அரசியல் புரிதலற்ற நடவடிக்கையாக, ரஜினி ராமர்கோவில் சென்றதைப் பார்க்க முடியுமா? அல்லது பாஜகவின் நெருக்கடி என்று மட்டும் கருத முடியுமா? என்பதும் ஒரு முக்கியமான கேள்விதான்.
ஆனால், தன்னைக் காவி அடையாளத்துடனோ, சங்கி என்ற அடையாளத்துடனோ சேர்ப்பதை ஒருபோதும் ரஜினி விரும்பவில்லை என்பதை நாம் தொடர்ந்து பார்க்க முடிகிறது.
“பி.ஜே.பி. கலரை எனக்குப் பூசுறதுக்கு டிரை பண்ணிட்டே இருக்காங்க! திருவள்ளுவருக்குக் காவி பூசின மாதிரி எனக்கும் பூசப் பார்க்கிறாங்க! திருவள்ளுவரும் மாட்ட மாட்டாரு… நானும் மாட்ட மாட்டேன்!” என்று தன்னைப் பாஜக அடையாளமாக மாற்றப் பார்த்ததை வெளிப்படையாகவே அவர் கிண்டல் செய்திருக்கிறார். திருவள்ளுவருக்குக் காவி பூசிய காலத்தில் அதையும் சுட்டிக்காட்டிய அரசியல் செய்தியாகவே இதைப் பார்க்கலாம்.
கடந்த ஆண்டு கடலூரில் சனாதன இந்து தர்மம் எழுச்சி மாநாடு என்ற பெயரில் இந்து மக்கள் கட்சி சார்பில் மாநாடு நடத்திய அர்ஜூன் சம்பத், அதில் அனுமதியின்றி பலர் படத்தைப் பயன்படுத்தியதைப் போலவே நடிகர் ரஜினிகாந்த் படத்தையும் பயன்படுத்தியிருந்தார்.
இதைக் கண்டு கோபமுற்ற ரஜினி, தன்னுடைய படத்தையோ பெயரையோ குரலையோ தன்னுடைய அனுமதியின்றி யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் மீறினால் சட்டப்படியான நடவடிக்கைகளை சந்திக்க வேண்டும் என்றும் வக்கீல் மூலம் அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி என்பது வெளிப்படை!
நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் ஆசைகளைப் பலர் தூண்டி விட்டிருந்தாலும், அது எங்கே கொண்டு போய் முடியும், யாருக்கு பலனாக அமையும், யாருடைய பின்புலத்தில் அவை நடைபெறுகின்றன, யாருக்கு எதிராக நம்மை முன்னிறுத்த பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் உணர்ந்து கொண்டுதான் அவர் துணிச்சலாக அதிலிருந்து தன்னை வெளியேற்றிக் கொண்டார்.
மதத்தோடும் பக்தியோடும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளத் தயங்காத நடிகர் ரஜினிகாந்த் மதவாத அரசியலுடன் தான் அடையாளப்படுவதை விரும்பவில்லை என்பதையே அவரது தொடர் நிலைப்பாடுகளும் செயல்பாடுகளும் காட்டுகின்றன. அதற்குத் தமிழர்கள் தன் மீது வைத்துள்ள அபிமானம் கெட்டு விடக்கூடாது என்பது காரணமாக இருக்கலாம் அல்லது தனது வணிக நலன்களுக்கு இந்த அடையாளம் பெரும் தடையாக அமையும் என்ற பழைய வரலாறும் காரணமாக இருக்கலாம்.
எப்படி ஆயினும், மகள் ஐஸ்வர்யா தன்னைப் பற்றி வெளிப்படுத்திய கருத்துக்களைக் கண்கள் கலங்க ரஜினி பார்த்துக் கொண்டிருந்தார் என்ற செய்தியே தமிழ்நாட்டு அரசியலையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வையும் புரிந்து கொண்ட ரஜினியின் வெளிப்பாடு என்று கருதலாம்.
– சமா.இளவரசன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசூரியன் நாடு: வெட்ட வெளி! வெந்நீர்க் குளம்! ஒட்டுத் துணியில்லாக் குளியல்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
போட்டித் தேர்வுகள்: அரசு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
6 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்!