கவர்னர் மாளிகையில் அரசியல்: சீமானுக்கு எம்.பி. பதில்!

அரசியல்

“கவர்னர் மாளிகையை அரசியல் கூடமாக மாற்றக்கூடாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சொல்லியிருக்கிறது. இதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புரிந்துகொள்ள வேண்டும்” என இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

மாலை முரசு நிறுவனர் பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 88வது பிறந்த நாளையொட்டி நேற்று, சென்னையில் உள்ள மாலை முரசு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது திருவுருவப் படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “அரசியல் என்பது ஒரு வாழ்வியல், அனைத்து இடங்களிலும் அரசியல் பேச வேண்டும் என எப்போது சொல்கிறார்களோ, அப்போதுதான் நாடு உருப்படும். ஆளுநரை நியமித்தது யார்? ஆர்எஸ்எஸ் உறுப்பினர்தானே? அப்போது அது சார்ந்த நிகழ்வுகளும் அதைச் சார்ந்த தலைவர்களும்தானே அவர் சந்திப்பார். ஆளுநரை சந்தித்து அரசியல் பேசுவதில் தவறில்லை. யார் வேண்டுமானாலும் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசலாம். ’அரசியல் பேசாதவன் மனிதராக இருக்க முடியாது’ என்கிறார் காந்தி. மனிதனின் உரிமைக்காக பேசும் அனைத்தும் அரசியல்தான். அந்த உரிமை ரஜினிகாந்திற்கு இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் ஆளுநரை நியமித்துள்ளார்கள். பிறகு ஏன் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது” என்றார்.

சீமான் பேசிய கருத்து குறித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. பி.ஆர்.நடராஜனிடம் பேசினோம். “ ‘நாங்கள் அரசியல் பேசினோம். அதை நாங்கள் வெளியில் சொல்ல முடியாது’ என்று நடிகர் ரஜினிகாந்த் சொன்னபிறகுதான், அது அரசியல் பேசும் இடமா என ஒரு கேள்வி வருகிறது. ஒரு கவர்னர் யாரை வேண்டுமானாலும் சந்திப்பார். அதை யாரும் தடுக்கவில்லையே? அதுகுறித்த கேள்வியையும் யாரும் கேட்கவில்லையே? ஆனால் ’நாங்கள் உள்ளுக்குள் அரசியல் பேசிவிட்டு வந்தோம்’ என நடிகர் ரஜினி சொன்னபிறகு, அது எப்படிச் சரியாகும் என்கிற கேள்வியைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்கிறது? அதைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் கேட்டார். கவர்னர் மாளிகையை அரசியல் கூடமாக மாற்றக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சொல்லியிருக்கிறது. அவர், தொடர்ந்து இதைச் செய்து வருகிறார். இதை சீமான் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *