நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி, தமிழக ஆளுநரை சந்தித்து அரசியல் பேசியதாக கூறிய நிலையில், ரஜினிகாந்த் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்தியா டுடே செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்தை பாஜகவில் இணைப்பதற்கு அதன் முக்கியத் தலைவர்களான அமித்ஷா, நரேந்திர மோடி உள்பட பலரும், பல கட்ட முயற்சிகளை எடுத்தனர்.
அவர்களது கோரிக்கைக்கு ரஜினிகாந்த் இணங்கவில்லை.இந்தநிலையில், தான் அரசியலுக்கு வரப்போவதாக 2017-ம் ஆண்டு ரஜினிகாந்த் அறிவித்தார்.
பின்னர் தனது உடல் நலனை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை என்றார்.
கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை ஆளுநர் மாளிகையில் சந்தித்த ரஜினிகாந்த், “ஆளுநரிடம் அரசியல் பேசினேன்.
அதனைத் தற்போது வெளியில் சொல்ல முடியாது” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆளுநர் ரவி, ரஜினிகாந்த் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆளுநர், ரஜினி சந்திப்பு குறித்து இந்தியா டுடே நிறுவனம் நேற்று (ஆகஸ்ட் 22) செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தின் அடுத்த ஆளுநராக நியமிக்கப்பட இருப்பதாகவும், அதுகுறித்து தான் ஆளுநர், ரஜினிகாந்த் பேசியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், ஆளுநருடன் ரஜினி அரசியல் பேசியதில் எந்த தவறும் இல்லை என்று அண்ணாமலை பேசியதையும், சமீபத்தில் இசைஞானி இளையராஜவுக்கு ராஜ்ய சபா நியமன எம்.பி பதவி பாஜக சார்பில் கொடுக்கப்பட்டது போல, ரஜினிக்கும் ஆளுநர் பதவி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பாஜகவின் அறிவு சார் பிரிவின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகி, ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தில் இணைந்து, மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜுன மூர்த்தி, ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை என்றதும் மக்கள் மன்றத்திலிருந்து விலகினார்.
இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற புதியக் கட்சியை உருவாக்கினார். இந்தநிலையில், நேற்று ஆகஸ்ட் 22 -ம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அர்ஜுன மூர்த்தி பாஜகவில் இணைந்தார்.
ரஜினியின் ஆசியோடு தான் பாஜகவில் தான் இணைந்திருப்பதாக அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
ஆளுநர் ஆர்.என். ரவி- நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!