அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இணைத்து வருகிறார் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று (நவம்பர் 24) தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும் எம்ஜிஆர் மனைவியுமான ஜானகி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியபோது, “மறைந்த தலைவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவதில் அதிமுக என்றும் பின்வாங்கியது கிடையாது. கட்சி பிளவுபட்ட நேரத்தில் அதிமுக வளர்ச்சிக்காக கட்சியை விட்டுக்கொடுத்து ஜெயலலிதா கரத்தை வலுப்படுத்தியவர் ஜானகி அம்மையார்.
அவரது நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தீர்மானம் நிறைவேற்றினார். அதனடிப்படையில், ஜானகி நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் இன்று அதிமுக, தொண்டர்கள், நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர்” என்றார்.
தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியிடம், ‘பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதை ஜானகி உணர்த்தியிருக்கிறார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வாய்ப்பிருக்கிறதா’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி, “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இணைத்து வருகிறார். அதிமுக இன்றைக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு அத்தாட்சியாக முத்தாய்ப்பாக இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது” என்றார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“கூட்டணி கட்சிகள் இல்லாமல் திமுக, அதிமுகவால் வெல்ல முடியாது” – கே.பாலகிருஷ்ணன்
“அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை சின்னம்”… ஜானகி நூற்றாண்டு விழாவில் ரஜினி