சென்னை வெள்ளம்: விசாரணை நடத்த மத்திய இணை அமைச்சர் வலியுறுத்தல்!

அரசியல்

சென்னையில் மழை நீர் வடிய நான்கு நாட்களானது ஏன் என்பது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று வலியுறுத்தியுள்ளார்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. டிசம்பர் 7-ஆம் தேதி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்து மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.450 கோடியும், நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.500 கோடியும் தமிழகத்திற்கு மத்திய அரசு விடுவித்தது.

இந்தநிலையில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை பார்வையிட மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று காலை சென்னை வந்தடைந்தார். செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் பகுதியில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

பின்னர் சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த  ராஜீவ் சந்திரசேகர், “பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி புயல் பாதித்த சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களை ஆய்வு செய்ய வந்தேன்.

புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவ உதவிகளை பிரதமர் மோடி அனுப்பி வைத்தார். மேலும், ரூ.1000 கோடி நிவாரண தொகை விடுவித்துள்ளார். சென்னையில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

மழை நீர் வடிகால் பணிகள் அமைக்கப்பட்ட போதும், தண்ணீர் வடிய 4 நாட்கள் ஆனது ஏன் ? இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும். மத்திய அரசிடம் உதவிகள் கேட்டால் செய்ய தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வெள்ள நிவாரண தொகை : யார் யாருக்கு எவ்வளவு? முழு விவரம்!

சென்னைக்கு ரூ.4000 கோடி: எடப்பாடிக்கு மா.சுப்பிரமணியன் சவால்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

1 thought on “சென்னை வெள்ளம்: விசாரணை நடத்த மத்திய இணை அமைச்சர் வலியுறுத்தல்!

  1. விசாரணை நடத்த சொல்லும்போது அப்படியே, அந்த கங்கை நதியை சுத்தப்படுத்த 20,000 கோடி செலவு பண்ணியும் ஒண்ணும் விளங்கலயே, அதையும் சேத்து விசாரணை பண்ணச் சொல்லுங்க சாமீ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *