“நான் கண் மூடினாலே அம்மாதான் நினைவுக்கு வருவார்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி உருக்கமாக பேசியுள்ளார்.
இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் அன்னையர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. ஆளுநரின் மனைவி லட்சுமி ரவியும் கலந்துகொண்டார்.
செஸ் வீரர் பிரக்ஞானந்தா, பாரா ஒலிம்பிக் வீரர் பொன்ராஜ், ஈரோடு மகேஷ் உள்ளிட்ட பலர் தங்களது அம்மாவுடன் வந்து விழாவில் பங்கேற்றனர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அம்மாவும் வந்திருந்தார்.
மேடைக்கு ஒவ்வொரு நபர்களின் அம்மாவையும் அழைத்து பொன்னாடை போர்த்தி, விருதுகளை வழங்கி கவுரவித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. திருநங்கை உரிமை செயல்பாட்டாளர் கிரேஸ் பானுவின் வளர்ப்புத் தாய் ஹீலாவும் ஆளுநரிடம் விருதை பெற்றார்.
விருது வழங்கியதைத் தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “ராஜ்பவனில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. அதைக் காட்டிலும் இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பானது. அன்னையை யாரும் மறக்கக் கூடாது. இன்றைய காலக் கட்டத்தில் வேலை உள்ளிட்ட காரணங்களால் வெளியூருக்கு செல்கிறோம். ஆனால் எக்காரணத்தை கொண்டும் அம்மாவை மறக்கவும் கூடாது, கைவிடவும் கூடாது.
நான் கண் மூடினாலே எனக்கு என் அம்மாதான் நினைவுக்கு வருவார்’ என்றார்.
விழாவின் தொடக்கத்தில் இசைஞானி இளையராஜா மிக அழகாக இசையமைத்த, பாடகர் யேசுதாஸ் குரலில் வெளியான ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ என்ற பாடல் ஒலிக்கப்பட்டது என்று கூறிய ஆளுநர், அம்மாவின் ஆசியில்லாமல் நீங்கள் எந்த ஒரு உயரத்தையும் அடைய முடியாது” என்றும் குறிப்பிட்டார்
ஆளுநர் தனது பேச்சின் போது நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒவ்வொருவரின் பெயரையும், அவர்களது அம்மாவின் பெயரையும் குறிப்பிட்டு பேசினார்.
நிகழ்ச்சி இறுதியில் இதனைச் சுட்டிக்காட்டிய ஈரோடு மகேஷ், “எவ்வளவு நினைவாற்றல் சார் உங்களுக்கு. ஒருவரது பெயரையாவது மாற்றி சொல்வீர்கள் என்று கவனித்துக்கொண்டிருந்தேன். ஆனால் அப்படி மாற்றி சொல்லவே இல்லை” என நிகழ்ச்சிக்கு அழைத்தமைக்கு நன்றி தெரிவித்தார்.
பிரியா
சித்தராமையாவுடன் கருத்து வேறுபாடா?: டி.கே.சிவக்குமார் பதில்!