Rajbhavan clarifies Governor skips

ஆளுநருக்கு எதிராக சபாநாயகர் அவதூறு: ஆளுநர் மாளிகை விளக்கம்!

அரசியல்

சட்டமன்றத்தில் ஆளுநர் ரவியை சபாநாயகர் அப்பாவு கடுமையாக விமர்சித்ததால், தமது பதவி மற்றும் சபையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு அவையை விட்டு ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தார் என்று ஆளுநர் மாளிகை இன்று (பிப்ரவரி 12) விளக்கம் அளித்துள்ளது.

நடப்பாண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று துவங்கியது. அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் ரவி புறக்கணித்தார். தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இதனையடுத்து சட்டமன்றத்தில் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தார்.

இந்தநிலையில், சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தது ஏன் என்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி தமிழக அரசிடமிருந்து ஆளுநர் உரை பெறப்பட்டது. அதில் உண்மைக்கு புறம்பான பல பத்திகள் இருந்தன.

பின்வரும் ஆலோசனையுடன் ஆளுநர் கோப்பைத் திருப்பி அனுப்பினார்:

தேசிய கீதத்திற்கு உரிய மரியாதையளித்து ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், இறுதியிலும் தேசிய கீதம் இசைக்க வேண்டும். இது தொடர்பாக கடந்த காலங்களில் முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார்.

ஆளுநரின் உரையானது அரசாங்கத்தின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும். தவறான அறிக்கைகளை வெளியிடுவதற்கும், அப்பட்டமான அரசியல் கருத்துக்களை வெளியிடுவதற்குமான ஒரு மன்றமாக இருக்கக்கூடாது.

ஆனால், ஆளுநரின் அறிவுரையை அரசு புறக்கணித்தது.

இதனையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (பிப்ரவரி 12) காலை 10 மணிக்கு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த முதல் பத்தியை வாசித்தார். ஆளுநர் ஆற்றிய உரையில், சபாநாயகர், முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு வணக்கம் மற்றும் புகழ்பெற்ற திருவள்ளுவரின் 738-வது திறக்குறளை மேற்கோள் காட்டி வாசித்தார்.

அதன்பிறகு, ஆளுநர், அரசியலமைப்புச்சட்ட கூறுகளை கருத்தில் கொண்டு, தவறான கருத்துக்கள் மற்றும் உண்மைக்கு புறம்பான ஏராளமான பத்திகள் ஆளுநர் உரையில் இருப்பதால் படிக்க இயலாது என்று தெரிவித்தார்.

சட்டமன்றத்திற்கு தனது மரியாதையை தெரிவித்து, தமிழக மக்களின் நலனுக்காக இந்த அமர்வு பயனுள்ளதாக அமைய வாழ்த்துகிறேன் என்று கூறி தனது உரையை முடித்தார்.

அதன்பின் சபாநாயகர், ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்தார். அந்த உரை முடியும் வரை ஆளுநர் அமர்ந்திருந்தார்.

சபாநாயகர் தனது உரையை முடித்ததும், திட்டமிட்டபடி தேசிய கீதம் இசைப்பதற்காக ஆளுநர் எழுந்தார்.

இருப்பினும், சபாநாயகர், கால அட்டவணையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, ஆளுநருக்கு எதிராக அவதூறாக பேசத் தொடங்கினார். மேலும், அவரை நாதுராம் கோட்சே மற்றும் பலரை பின்பற்றுபவர் என்று கூறினார்.

சபாநாயகர் தனது அநாகரிகமான நடத்தையினால், சபையின் கௌரவத்தையும், அவரது பதவியின் கௌரவத்தையும் குறைத்தார்.

சபாநாயகர் ஆளுநருக்கு எதிராகக் கடுமையான விமர்சனம் செய்தபோது, ஆளுநர் தமது பதவி மற்றும் சபையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியேறினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆளுநரின் வெளிநடப்பு நியாயப்படுத்த முடியாதது: அன்புமணி

“ஆளுநரை பற்றி உச்ச நீதிமன்றம் தெரிந்துகொள்ளும்” : அமைச்சர் ரகுபதி

+1
0
+1
6
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

1 thought on “ஆளுநருக்கு எதிராக சபாநாயகர் அவதூறு: ஆளுநர் மாளிகை விளக்கம்!

  1. ஆட்சி முடிந்ததும் சபை நாயகருக்கு சட்டபூர்வமான அதிர்ச்சிகள் காத்திருக்கலாம்..மக்களை ஏமாற்றுவதை ஒரு போதும் ஏற்க இயலாது…உச்சநீதிமன்றம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *