செப்டம்பர் 18: எழுபத்து மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய எழுச்சிமிகு மாலை!

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

நூல் அறிமுகம்: சாமானியர்களின் ஆட்சி: தி.மு.க-வும் தமிழக அரசியலின் வடிவமைப்பும், 1949-1967

இந்தக் கட்டுரையை எழுதத் துவங்கும் நேரம் செப்டம்பர் 18 மாலை. சரியாக எழுபத்து மூன்றாண்டுகளுக்கு முன் இதே நாளில் ராபின்சன் பூங்காவில் ஒரு கூட்டம் கூடியது. அது திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி துவங்கியதை அறிவிக்கும் பொதுக்கூட்டம்.

அதற்கு முதல் நாள் அந்தக் கட்சி துவங்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் கொட்டும் மழையில் அண்ணா அந்தக் கட்சி துவங்கப்படும் சூழலையும், லட்சியங்களையும் எடுத்துரைத்தார்.

ஒவ்வோர் ஆண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் முப்பெரும் விழாவாக இந்த வாரத்தை கொண்டாடும். இந்த ஆண்டு புதியதொரு வரலாற்று சாதனையாக தமிழக அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கிவைத்தார்.

விருதுநகரில் நிகழ்ந்த மாநாட்டில் திராவிட இயக்க ஆட்சியின் சிறப்பினை எடுத்துரைக்கும் திராவிட மாடல் என்ற பெயரில் அவர் எழுதிய நூலை வெளியிட்டுள்ளார்.

இந்தச் சிறப்புமிக்க தருணத்தில் இந்த ஆண்டு வெளியாகியிருக்கும் மற்றொரு நூலை குறித்து சுருக்கமான அறிமுகம் ஒன்றை எழுத நினைக்கிறேன். அந்த நூல் நண்பர்கள் பேராசிரியர் ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன், சுபகுணராஜன் ஆகியோருடன் நானும் இணைந்து ஆங்கிலத்தில் எழுதியுள்ள ஒரு நூல்.

அதன் பெயர் Rule of the Commoner: DMK and the Formations of the Political, 1949-1967 என்பதாகும்.  

இந்த நூலை இன்று நினைவில் கொள்வதற்குக் காரணம், அது ராபின்சன்  பூங்காவில் நிகழ்ந்த கூட்டத்தை குறித்த வர்ணனையுடன் துவங்குவதுதான். அதை ஒரு காட்சியாகக் கூறும் நூலின் அறிமுகப் பகுதி, அதற்கு அடுத்த காட்சியாக 1969ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அண்ணா மறைந்தவுடன் தமிழகம் துயரக்கடலாக காட்சியளித்ததை வர்ணிக்கிறது.

அதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்னால் தி.மு.க ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததையும், தங்களது தேர்தல் வெற்றியை பெரியாருக்கு காணிக்கையாக்கியதையும் கூறுகிறது. இந்த நிகழ்வுகளின் வரலாற்று உள்ளடக்கம் திராவிட தமிழர் என்ற தன்னுயர்வு பெற்ற மக்கள் தொகுதி உருவானதே.

பெரிய அளவு பணபலமும், சமூக பின்புலமும் இல்லாத இளைஞர்களால் துவங்கப்பட்ட கட்சி, அது துவங்கப்பட்ட பதினெட்டு ஆண்டுகளில், இந்திய தேசிய காங்கிரஸை தேர்தலில் வென்று ஆட்சியில் அமர்ந்த வரலாற்றின் முக்கியத்துவத்தை இந்த நூல் கோட்பாட்டு ரீதியாக ஆராய முற்படுகிறது.

இந்த நூல் எழுதப்படுவதற்கு காரணம் என்ன?

தமிழகத்திற்கு வெளியே இந்தியாவின் பிற மாநிலங்களிலும், பிற மேலை நாடுகளிலும் பாமரர்களிடையேயும் சரி, படித்தவர்களிடையேயும் சரி திராவிட முன்னேற்றக் கழகம் குறித்த பல தவறான பார்வைகள் நிலவுகின்றன.

ஆங்கிலத்தில் மேலை நாட்டவரால் எழுதப்பட்ட ஆய்வு நூல்களில் தமிழ் மொழியில் வெளியான முக்கியமான நூல்கள், தி.மு.க தலைவர்களின் எழுத்தாக்கங்கள், கட்சி செயற்பாட்டாளர்களின் வாழ்வனுபவங்கள் போன்றவை பதிவாகவில்லை.

குறிப்பாக மிக முக்கிய நூலான அண்ணாவின் ஆரிய மாயை குறித்த விரிவான வாசிப்பு என்பது ஆங்கிலத்தில் நிகழவில்லை. அந்த நூலை குறிப்பிடுவார்களே தவிர, அதில் அண்ணா எத்தகைய கருத்துகளை முன்வைக்கிறார் என்பதை விவாதித்ததில்லை.

இது போன்ற பல போதாமைகளால் தி.மு.க தமிழ்நாட்டு பிரிவினையை கோரிய தமிழ் தேசிய கட்சி, பார்ப்பனர்களுக்கு எதிராக வெறுப்பரசியல் செய்த கட்சி, சினிமா கவர்ச்சியால் வளர்ந்த கட்சி, வட நாட்டுக்கும், இந்தி மொழிக்கும் எதிராக மொழிவெறியை வளர்த்த கட்சி, உழைக்கும் மக்களின் வர்க்க உணர்வை திசை திருப்பிய கட்சி என்றெல்லாம் பலவாறான தவறான சித்தரிப்புகளும், கருத்துகளும் தமிழகத்திற்கு வெளியே நிலவுகின்றன.

அத்தகைய தவறான கருத்துகளைத் திருத்தவும், தி.மு.க மக்களாட்சியின் விழுமியங்களை போற்றிய கட்சி என்பதையும், சாமானிய மக்களை அரசியல்மயப்படுத்தி, அதிகாரப் பரவலை சாத்தியமாக்கிய கட்சி என்பதையும், அப்படி எளிய பின்னணியிலிருந்த மக்கள் ஆட்சிக்கு வந்ததால் எவ்வாறு மக்கள் நல திட்டங்களை மேற்கொண்டு இன்று திராவிட மாடல் என்று அழைக்கும்படியான ஒப்பீட்டளவில் பரவலான அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியையும், சமூக மேம்பாட்டையும் சாதிக்க முடிந்துள்ளது என்பதை எடுத்துக்கூறவும் எழுதப்பட்டுள்ள நூலாகும்.

குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம், தேசியம் என்ற வழமையான சொல்லாடலை முன்னெடுக்காமல் கூட்டாட்சி குடியரசு என்ற லட்சியத்தையே முன்மொழிந்தது என இந்த நூல் வாதிடுகிறது. கட்சி துவங்குவதற்கு முன்பிருந்தே திராவிட நாடு என்ற தென்னிந்தியக் கூட்டாட்சி குடியரசைத்தான் அண்ணா லட்சியமாகக் கொண்டிருந்தார் என்பதை தெளிவு படுத்துகிறது.

பின்னர் 1963ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இந்தியக் குடியரசினை ஏற்க வேண்டும் என்ற பிரிவினை வாத தடை சட்டம் கொண்டு வரப்பட்டபோது திராவிட கூட்டாட்சி குடியரசு என்பதற்கு பதிலாக இந்திய கூட்டாட்சி குடியரசு என்று லட்சியத்தை மாற்றிக்கொண்டு, மாநில சுயாட்சி என்ற இலக்கினை நோக்கி பயணிக்கத் துவங்கியது என்பதை சான்றுகளுடன் விளக்குகிறது.

அறிஞர் அண்ணா ஒன்றுக்கு மேற்பட்ட தருணங்களில், அமெரிக்க அரசியல்வாதி வெண்டல் வில்க்கி முன்மொழிந்த உலகக் கூட்டாட்சி குடியரசினை குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டுகிறது.

சுருங்கச் சொன்னால் ஜாதீய ஏற்றத்தாழ்வுகள் நீங்கி சமூக நீதியும், சம வாய்ப்பும் நிலவும் சமூகம், சுயாட்சி உரிமை கொண்ட திராவிட-தமிழ் மக்கள் தொகுதி ஆகிய லட்சியங்களையே முன்வைத்து இயங்கிய, அவற்றை நோக்கிய பயணத்தில் சாதனைகள் படைத்திட்ட கட்சியே  திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை விளக்கும் நூல் என்று கூறலாம்.

நூலின் கட்டமைப்பு

இந்த நூல் அறிமுகம், முடிவுரை நீங்கலாக கருத்துருவாக்கம் (Ideation), கற்பனை (Imagination), களச்செயல்பாடு (Mobilization) ஆகிய மூன்று பகுதிகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் நான்கு அத்தியாயங்கள் அடங்கியுள்ளன.

முதல் அத்தியாயம் “திராவிட-தமிழர்” என்ற மக்கள் தொகுதி கட்டமைக்கப்பட்டதை விளக்குகிறது. இதன் பொருள் என்னவென்றால் மக்கள் தாங்கள் ஒரு மக்கள் தொகுதி என்ற தன்னுணர்வு பெறுவதாகும்.

அரசியல் செயல்பாட்டின் ஆகச் சிறந்த பகுதி இதுதான் என்பதை எர்னெஸ்டோ லக்லாவ் என்ற அரசியல் தத்துவவாதி கூறுகிறார். திராவிடம் என்ற சொல் பார்ப்பனரல்லாதோர் அரசியலைக் குறிக்கிறது.

ஜாதீய சமூகத்தை உருவாக்கிய ஆரிய, சமஸ்கிருத, பார்ப்பனீய தர்ம சாஸ்திரங்களை நிராகரிப்பதை குறிக்கிறது. தமிழர் என்ற சொல் அனைத்து மக்களையும் ஒன்றுபடுத்தி தன்னுணர்வு கொள்ளச் செய்வதை குறிக்கிறது.

திராவிட அடையாளம் என்பதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள அண்ணாவின் ஆரிய மாயை  நூலையும், லட்சிய வரலாறு என்ற பிரசுரத்தையும் விரிவாக விவாதிக்கிறது.

இரண்டாம் அத்தியாயம் மொழி பயன்பாடு, அடையாளம் என்பதன் அம்சங்களை ஆராய்கிறது. சுமதி ராமசாமி என்ற வரலாற்று பேராசிரியர் எழுதிய Passions of the Tongue: Language Devotion in Tamil Nadu, 1891-1970 (1997) என்ற நூலையும், மோகன் ராம் என்ற பத்திரிகையாளர் எழுதிய Hindi against India: The Meaning of the DMK (1968) என்ற நூலையும் விமர்சன ரீதியாக ஆய்வு செய்கிறது.

அதனூடாக தமிழ் உணர்வு, தமிழ் அடையாளம் ஆகியவை எப்படி பிறப்பின் அடிப்படையில் அமையாமல் அடித்தள மக்கள் அரசியல் தன்னுணர்வு சார்ந்து உருவாகிறது என்பதனையும், மொழிப்போர் தியாகிகளின் ஈகையை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் கோட்பாட்டு ரீதியாக விவாதிக்கிறது.

மூன்றாம் அத்தியாயம் தி.மு.க-வின் மதம், கடவுள் சார்ந்த கோட்பாட்டினை விவாதிக்கிறது. சார்ல்ஸ் ரையர்சன் எழுதிய Regionalism and Religion: The Tamil Renaissance and Popular Hinduism என்ற நூலை ஆராய்கிறது.

சைவ மறைஞானி திருமூலரின் “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற வாசகத்தை அண்ணா இருபதாம் நூற்றாண்டு அரசியலில் கையாண்டதன் சிறப்பை எடுத்துரைக்கிறது. அண்ணா 1965ஆம் ஆண்டு காஞ்சி பத்திரிகையில் “பற்று” என்பதைக் குறித்து எழுதிய அற்புதமான கட்டுரையை விரிவாக விவாதிப்பதன் மூலம் அண்ணா சமூக அறம் குறித்து கொண்டிருந்த வளமான கருத்துப் புலத்தை எடுத்துக் கூறி, மேலை நாட்டு அறிஞர் சார்ல்ஸ் டைலரின் சிந்தனைகளுடன் இணைத்து ஆராய்கிறது.

மறைமலை அடிகள் உள்ளிட்ட நவீன சைவர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியலுக்கு உள்ள தொடர்பும் முரண்களும் எத்தகையன என்பதையும் விவாதிக்கிறது.

நான்காம் அத்தியாயம் எப்படி தி.மு.க இடதுசாரி தன்மை கொண்ட வெகுஜன அரசியல் கட்சி என்பதை விரிவாக விவாதிக்கிறது. அண்ணாவின் பணத்தோட்டம் என்ற முக்கியமான நூலை விரிவாக அலசுவதன் மூலம் அவரது பொருளாதார சிந்தனையை அடையாளம் காண்கிறது.

இரண்டாம் பகுதி இலக்கியம், கற்பனை படைப்புகள் சார்ந்த அரசியலை விவாதிப்பதாக அமைகிறது.

அதில் இடம் பெறும் ஐந்தாம் அத்தியாயம் அண்ணாவின் “சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்” என்ற நாடகத்தின் முக்கியத்துவத்தை விவாதிக்கிறது. கட்சியின் துவக்க ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்ட மாநாடுகளிலும் தவறாது நிகழ்த்தப்பட்ட இந்த நாடகத்தில் பெரும்பாலும் அண்ணாவே காகபட்டராகத் தோன்றியதையும், எப்படி தி.மு.க-வின் அரசியலை எளிமையாகப் புரியவைக்க மராத்திய சிவாஜியின் வரலாற்றில் இருந்து முக்கிய நிகழ்வொன்றை எடுத்து அண்ணா தன் கற்பனையாற்றலால் மெருகேற்றுகிறார் என்பதை கூறுகிறது.

ஆறாவது அத்தியாயம் கம்பராமாயணம், பெரிய புராணம் ஆகியவற்றை தீயிட்டுக் கொளுத்த தி.க மேற்கொண்ட முடிவும், அதனை ஒட்டி ரா.பி.சேதுப்பிள்ளை, சோமசுந்தர பாரதியார் ஆகியோருடன் அண்ணா மேற்கொண்ட விவாத நிகழ்வுகளையும் கூறுகிறது. அந்த விவாதங்கள் அடங்கிய “தீ பரவட்டும்” நூல் தி.மு.க துவக்க காலத்தில் தொடர்ந்து அச்சிடப்பட்டு விற்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அண்ணா எழுதிய கம்பரசம் என்ற கம்பராமாயண ஆய்வு நூலையும், அதன் உள்ளார்ந்த அரசியல் நோக்கையும் குறித்து இந்த அத்தியாயம் விவாதிக்கிறது.

ஏழாவது அத்தியாயம் எதிர் கதையாடல்கள் என்ற வகையில் எப்படி இந்து புராணங்கள் மறுவாசிப்பு செய்யப்பட்டன என்பதை கூறுகிறது. பாரதிதாசனின் “இரணியன் அல்லது இணையற்ற வீரன்” நாடகமும், அண்ணாவின் “நீதிதேவன் மயக்கம்” நாடகமும் விவாதிக்கப்படுகின்றன.

புராணக் கதைகளுக்கு மட்டுமல்லாமல், புதுமைப்பித்தனின் பொன்னகரம் என்ற சிறுகதைக்குக் கூட குடியரசு ஏட்டில் எதிர்கதை ஒன்று பிரசுரிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, இது போன்ற எதிர்கதையாடல்களின் அரசியல் நோக்கைக் குறித்து சிந்திக்கிறது.

எட்டாவது அத்தியாயம் புனைவின் வலிமை என்ற தலைப்பில் எவ்வாறு தி.மு.க தலைவர்களில் பலரும் புனைவெழுத்தில் ஈடுபட்டனர், நாவல்கள், சிறுகதைகள் எழுதினர் என்பதைக் குறித்துப் பேசுகிறது. புனைவெழுத்து என்பதன் உலக வரலாற்று பின்னணி என்ன, முன்னம் நிலவிய காவிய பாணி இலக்கியத்திற்கும் நவீன புனைவெழுத்துக்குமான வேறுபாடு என்ன, எவ்வாறு புனைவெழுத்து பொதுவெளியில் சமூக மாதிரிகளை உருவாக்குகிறது என்பதையெல்லாம் கணக்கில் கொண்டு அண்ணாவின் ரங்கோன் ராதா, கலைஞரின் புதையல் ஆகிய இரு நாவல்களை உதாரணங்களாக விவாதிக்கிறது.

களச்செயல்பாடு பகுதியில் கட்சியின் கட்டமைப்பு, வளர்ச்சி, போராட்டங்கள், தேர்தல் பங்கேற்பு ஆகியவை கூறப்படுகின்றன.

இந்தப் பகுதியில் இடம் பெறும் ஒன்பதாம் அத்தியாயம் கட்சி கட்டமைப்பு, துவக்கக்கால செயல்பாடுகள், அது எதிர்கொண்ட இடர்பாடுகள், சவால்கள் போன்றவற்றை சுருக்கமாக கூறுவதுடன் ஓர் உதாரணமாகக் காவியப் புலவர் பண்ணன் எழுதிய “பா.நா.வுடன் பதினாறு ஆண்டுகள்” என்ற சிறு நூலை விரிவாக அலசுவதன் மூலம் கட்சி கிளையொன்றின் வரலாற்றைக் கூறுகிறது.  

அதில் உடுமலை நாராயண சிங் என்ற பா.நாராயணின் செயல்பாடுகள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இடம் பெறுகின்றன. பின்னாளில் கோவை மாவட்டச் செயலாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கியவர் அவர்.

பத்தாவது அத்தியாயம் கட்சி நடத்திய அலையலையான போராட்டங்களைத் தொகுத்துக் கூறுகிறது. காங்கிரஸ் அரசு காலனீய அரசு போலவே அரசியல் எதிர்ப்பை கடுமையாக ஒடுக்க முற்பட்டதும், அது எவ்வாறு தி.மு.க-வின் வளர்ச்சிக்கு உரமிடுவதில் முடிந்தது என்பதையும், மும்முனை போராட்டம் போன்ற நிகழ்வுகளையும் வர்ணிக்கிறது. போராட்டங்களில் கலைஞரின் முன்னெடுப்புகளை விவரிக்கிறது.

பதினோராவது அத்தியாயம் எரிமலை வெடிப்பினை ஒத்த 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியையும், அதன் தாக்கத்தையும் விரிவாக ஆராய்கிறது.

கீழப்பழுவூர் சின்னசாமி துவங்கி மொழிப்போர் ஈகையர்களின் தியாகம் எப்படி அரசியல் உணர்வு பெரு நெருப்பாய் பரவ வகை செய்தது என்பதையும், கூடலூர், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் நிகழ்ந்த புதிரான பெருவெடிப்பான சம்பவங்களையும் விவாதிக்கிறது.

பன்னிரண்டாம் அத்தியாயம் தி.மு.க-வின் தேர்தல் பங்கேற்பின் வரலாற்றினை விரிவாக அலசுகிறது. வெகுஜன அரசியலில் தேர்தல் என்ற நிகழ்வினை எப்படிப் பொருத்திப் பார்ப்பது, கோட்பாட்டக்கம் செய்வது என்பது போன்ற அம்சங்களையும் தி.மு.க வளர்ச்சியை முன்வைத்து விவாதிக்கிறது.

 முடிவுரை நவீன அரசியலின் தத்துவ, கோட்பாட்டு அடிப்படைகளை விவாதித்து எவ்வாறு தி.மு.க-வின் தமிழக அரசியல் கள வடிவமைப்பு தமிழக வரலாற்றினை செதுக்கியது என்பதை எடுத்துக் கூறுகிறது. முத்தாய்ப்பாக மூன்று தனி அனுபவங்களை கூறி நூலை நிறைவு செய்கிறது.

முதலாவது நூலாசிரியர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.சண்முகசுந்தரம் அவர்களை சந்தித்த அனுபவம். இரண்டாவது தி.மு.க வரலாற்றாசிரியரான க.திருநாவுக்கரசு நூலொன்றில் இடம்பெறும் மண்ணாசை ஷங்கர் ராம் என்ற எழுத்தாளருடன் அவருடைய சந்திப்பு குறித்தது;  மூன்றாவது எழுத்தாளர் இமையம் பதிவு செய்த அவருடைய பள்ளி வயதில் கட்சியில் சேர்ந்த அனுபவம்.

பல கோடி மக்களின் வாழ்வினைத் தொட்ட, மாற்றியமைத்த பிரமாண்டமான சமூக மாற்றத்தினை நிகழ்த்திய திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றின் சில முக்கிய பரிமாணங்களை கோட்பாட்டு சித்திரங்களாக தீட்ட முயன்றுள்ள நூல் எனலாம்.

இந்தியாவின் பிற மாநிலங்களிலும், அயல் நாடுகளிலும் கல்விப் புலத்திலும், பொது மன்றத்திலும் திராவிட அரசியல் குறித்த புரிதலை இந்த நூல் அதிகரிக்கும், அதை நோக்கிய கவனத்தை ஈர்க்கும் என்பதே நம்பிக்கை.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

தந்தை பெரியாரை கலங்க வைத்த சீட்டா!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.