நேற்று முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இச்சூழலில்,”அடுத்து வரும் 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது”என்று தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார்.
இதற்கிடையே இன்று சென்னையில் மழை நிவாரண பணிகளும் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் மழை நிவாரணப் பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ரிப்பன் மாளிகையில் இன்று (ஜூன் 19) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “துரிதமாக பணிகளை மேற்கொண்டதால் நேற்று பெய்த மழையில் இருந்து இரண்டு மணி நேரத்திலேயே இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. எனவே மக்கள் முதல்வரை வாழ்த்துவதோடு அவருக்கு நன்றியும் கூறியுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு மழைநீர் தேங்கிய இடங்களில் தற்போது மழைநீர் தேங்கவில்லை.
கணேசபுரம் பகுதியை பொறுத்த வரை ரயில்வேயிடம் அனுமதி பெற வேண்டி இருக்கிறது. அங்கு ஆறுகோடி ரூபாய் அளவில் பணிகள் மேற்க்கொள்ளப்பட இருக்கிறது.
அதற்கு ரயில்வே சார்பில் அனுமதி கிடைத்தால் அந்த பணி இந்த பருவமழைக்குள் நிறைவு செய்யப்படும்.
கணேசபுரம் சுரங்கப்பாதையும் எவ்வளவு பெரிய மழைவந்தாலும் தண்ணீர் தேங்காத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் பேரிகார்ட் செய்கின்ற பணியில் சென்னை மாநாகராட்சி ஈடுபடும்.
இந்த பருவமழைக்கு முன்பாக மழை நீர் வடிகால் பணிகளை சவாலாக மேற்கொள்ள இருக்கிறோம்.
தற்போது எழுபது கிலோ மீட்டர் அளவிற்கு 250 கோடி ரூபாய் செலவில் மேற்க்கொள்ளப்பட உள்ள இந்த பணிகள் 30 கிலோ மீட்டர் அளவிற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் 15 ஆம் தேதிக்குள் மீதி பணிகள் நடைபெற வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்றார்.
மேலும், “முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இந்த பணிகள் நடைபெறும். நிலத்தடி நீர் உயர்கின்ற ஒரு நல்ல சூழல் நிலவுகிறது. தற்போது எடுத்துள்ள போர்க்கால நடவடிக்கைகளால் மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
1913 என்ற எண்ணில் உதவி தேவைப்படுபவர்கள் அழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கனமழையால் மரங்கள் விழுந்தால், அதனை அப்புறப்படுத்துவதற்கு உரிய சாதனங்களுடன் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்”என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கனமழை… தயார் நிலையில் 4 ஆயிரம் பணியாளர்கள்: அமைச்சர் விளக்கம்!
மதுரை ரயில் நிலையத்தில் மீன் சின்னம்: தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்!
