பொள்ளாச்சி கோழிப்பண்ணை நிறுவனத்தில் ரெய்டு : பின்னணி என்ன?

Published On:

| By Kavi

பொள்ளாச்சியில் பிரபல கோழிப்பண்ணை நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், தங்களிடம் உரிய கணக்கு வழக்குகள் இருப்பதாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மறுபக்கம் வருமான வரித்துறையினரும் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி முதல் நெல்லை, சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில்  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த வகையில் நேற்று (ஏப்ரல் 8) இரவு  பொள்ளாச்சியில் பிரபல கோழிப்பண்ணை நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் எம்பிஎஸ் ஹேச்சரீஸ் என்ற பெயரில் கோழிப் பண்ணைகள் மற்றும் கோழித் தீவனம் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

பொள்ளாச்சி சுற்றுவட்டார விவசாயிகள் மூலமாக கோழிப்பண்ணைகள் அமைத்து பிராய்லர் கோழிகளையும் இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தில் நேற்று தொடங்கி  இன்று விடிய விடிய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். விடிய விடிய நடந்த சோதனையில் 32 கோடி ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், பாதுகாப்பு கருதி அந்த பணம் அருகில் உள்ள் எஸ்.பி.ஐ வங்கியில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வந்தன.

தொடர்ந்து பண்ணை உரிமையாளர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த ரெய்டு தொடர்பாக அந்நிறுவன வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஊஞ்சவேலம்பட்டியைச் சேர்ந்த இளமுருகு, சரவணமுருகு ஆகியோர் எம்பிஎஸ் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இருவரும் சகோதரர்கள். 24 மனை தெலுங்கு செட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

இதில் தம்பி சரவணமுருகு பாஜக ஆதரவாளர். அண்ணன் இளமுருகு எந்தக்கட்சியும் கிடையாது. இவர்கள் அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமனின் பங்காளிகள்.

கோவை மாவட்டத்திலேயே வருமான வரி கட்டுவதில் நம்பர் 1 நிறுவனம் லட்சுமி  சாரிஸ் குரூப்தான். அடுத்த இடத்தில் எம்பிஎஸ் ஹேச்சரீஸ் நிறுவனம் உள்ளது.

எம்பிஎஸ் ஹேச்சரீஸ் நிறுவனத்திடம்  பாஜகவினர் தேர்தல் நிதி கேட்டிருந்தனர். ஆனால் நிதி எல்லாம் கொடுப்பதில்லை என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பாஜகவினர் கோபப்பட்டு சென்றனர்.

இதற்கிடையே பொதுவாக தொழில் நிறுவனங்களில்  வசூல் தொகை   மாதத்தின் முதல் வாரத்தில் தான்  அதிகமாக வரும். அப்படி வந்த  பணம் தான் நிறுவனத்தில் இருந்தது. இதை ஸ்மெல் செய்து பாஜகவினரே வருமான வரித்துறையில் போட்டுக் கொடுத்தார்களா என்று தெரியவில்லை. மேலும் பொள்ளாச்சி ஜெயராமன் பங்காளிகள் என்பதால் அதிமுக நிறுவனம் என்றும் கிளப்பிவிடுகிறார்கள். எங்களிடம் வருமானத்துக்கேற்ற வரி செலுத்தி வரும்  கணக்குகள் எல்லாம் சரியாக இருக்கிறது” என்று தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

”ஸ்டாலின் மனைவி பார்த்த கிளி சோதிடர்கள் யாரும் கைதாகவில்லையே?”: அன்புமணி

11வது சம்பவம் : அமெரிக்காவில் சடலமாக இந்திய மாணவர் கண்டெடுப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share