நாம் தமிழர் நிர்வாகிகள் வீட்டில் சோதனை : என்.ஐ.ஏ.விளக்கம்!

Published On:

| By Kavi

nia raid on naam tamilar party members home

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, தென்காசி என நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களின் வீடுகளில் இன்று (பிப்ரவரி 2) சோதனை நடத்திய என்.ஐ.ஏ. முக்கிய ஆவணங்களை கைப்பற்றியிருப்பதாக தெரிவித்துள்ளது. nia raid on naam tamilar party members home

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரமுகர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தினர்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இருக்கும் விஸ்வநாதபேரியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் வீட்டில் 5 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்றது. இவர் 2019 தேர்தலில் நாதக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்.

மதிவாணன் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், வரும் 7ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு சம்மன் கொடுத்துச் சென்றுள்ளனர்.

திருச்சி சண்முகா நகரில் வசிக்கும் நாதகவைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நாதக தகவல் தொழில்நுட்ப பாசறையின் மாவட்ட நிர்வாகி விஷ்ணு பிரதாப் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

கோவையில், ஆலாந்துறை ஆர்.ஜி. நகரில் வசிக்கும் ரஞ்சித் மற்றும் முருகன் உள்ளிட்டோரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

அதுபோன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி, பிப்ரவரி 5ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருக்கிறது என்.ஐ.ஏ.

2022ஆம் ஆண்டு சேலம் அருகே ஓமலூரில் துப்பாக்கி தயாரித்ததாக சிலர் கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கின் அடிப்படையில் இன்று சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.

இதுகுறித்து என்.ஐ.ஏ இன்று மாலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில்  தொடர் சோதனை நடத்தப்பட்டது.

ஓமலூர் பிஎஸ் ஆயுத வழக்கில் (RC-33/2022/NIA/DLI) தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சென்னை, திருச்சி, கோவை, சிவகங்கை மற்றும் தென்காசியில் நடத்தப்பட்ட சோதனையில், தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலை புலிகள் மற்றும் அதன் தலைவர் கொல்லப்பட்ட பிரபாகரன் தொடர்புடைய நூல்கள், ஒரு லேப்டாப், 7 மொபைல்கள், 8 சிம்/மெமரி கார்டுகள், 4 பென் டிரைவ்கள், குற்றவியல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு என்பது முதலில் தமிழ்நாடு காவல் துறையால் பதிவு செய்யப்பட்டது. கடந்த 19 மே 2022 அன்று சேலம், புளியம்பட்டி பிரிவில் வாகன சோதனையின் போது நவீன் சக்கரவர்த்தி மற்றும் சஞ்சய் பிரகாஷ் என இருவர் கைது செய்யப்பட்டனர்.

இரண்டு கைத்துப்பாக்கிகள், வெடிமருந்துகள் ஆகியவற்றை வைத்திருந்ததன் காரணமாக இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளால் ஈர்க்கப்பட்டவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இணையான ஓர் அமைப்பை நிறுவி தமிழகத்தில் ஆயுதப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் கபிலன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை 2022 ஜூலை 25 அன்று என்.ஐ.ஏ கையிலெடுத்து விசாரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஜீவாவின் ‘டெஃப்  ஃப்ராக்ஸ்’: பின்னணியில் ரஜினியின் குட்டிக்கதை!

”இதெல்லாம் துரோகம்” டிராவிட்டோடு சேர்த்து பிசிசிஐ வறுக்கும் ரசிகர்கள்!

nia raid on naam tamilar party members home

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share