லஞ்ச ஒழிப்புத் துறை பிடியில் காமராஜ் : எங்கெல்லாம் ரெய்டு?
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, மன்னார்குடியில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் இன்று காலை அதிரடியாய் நுழைந்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர், சென்னை, கோவை திருச்சி என 49 இடங்களில் சோதனை நடத்தப்படும் நிலையில் இதில் சென்னையில் மட்டும் 6 இடங்களில் சோதனை நடக்கிறது. ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள காமராஜ் நண்பர் ஒருவரது ஆடிட்டர் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது
நீலாங்கரையில் உள்ள இண்டர்நேஷனல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட், சாஸ்திரி நகரில் உள்ள காமராஜுக்கு தெரிந்தவரான முத்துலட்சுமி என்பவரின் வீடு, மயிலாப்பூரில் உள்ள ஜிபிஏ கன்சல்டிங் பிரைவேட் லிமிட்டெட், போயஸ் கார்டனில் அருண்குமார் என்பவர் நடத்தி வருகிற பிஎஸ்கே கன்ஸ்ட்ரக்சன் மற்றும் அண்ணாநகரில் தேசபந்து என்பவரது அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பிளாசம் ஹோட்டலில் கணக்கு விவரங்களை அதிகாரிகள் கேட்டு வருகின்றனர். தில்லை நகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காமராஜின் நண்பர் வீடுகள் என மூன்று இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
திருவாரூர் நன்னிலத்தில் உள்ள காமராஜ் வீடு, மன்னார்குடி முதல் தெருவில் உள்ள அதிமுக நகரச் செயலாளரும், காமராஜின் உறவினரான ஆர்.ஜி. குமார், வேட்டை திடலில் உள்ள காமராஜின் நண்பர் சத்தியமூர்த்திக்குத் தொடர்புடைய இடம், தஞ்சாவூரில் உள்ள சம்மந்தியின் வீடு, தஞ்சையில் காமராஜ் புதிதாகக் கட்டி வரும் மருத்துவமனை ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது.
இதில் ஒரு சில இடங்களில் பென்டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சோதனை நடைபெறுவதால் காமராஜின் வீடு முன்பு அதிமுகவினர் குவிந்து திமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர்.
-பிரியா