ராகுலின் விளையாட்டே தோல்விகளுக்கு காரணம் : குலாம் நபி ஆசாத் கடும் தாக்கு!

அரசியல்

ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான போக்கே காங்கிரசின் தொடர் தோல்விகளுக்கு காரணம் என்று அக்கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

குலாம் நபி கடிதம்

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தொடங்கி அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார் அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். தனது விலகல் குறித்து கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் ராகுல் காந்தியை கடுமையாக சாடியுள்ளார்.

கட்சிக்காகவே அர்ப்பணித்தேன்

1970களில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த குலாம் நபி ஆசாத், இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி , சோனியா காந்தி என நேரு குடும்பத்துடனும் காங்கிரஸ் கட்சியுடனும் தனக்கு இருந்து நெருக்கத்தை விலாவாரியாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தனது ஆரோக்கியத்தையும், குடும்பத்தையும் தியாகம் செய்து காங்கிரஸ் கட்சிக்காகவே தனது இளமைக் காலத்தை அர்ப்பணித்ததாக குலாம் நபி தெரிவித்துள்ளார்.

மூத்த தலைவர்களுக்கு மதிப்பில்லை

2004 முதல் 2014-வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி செய்ய சோனியா காந்தி முக்கிய காரணமாக இருந்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், கட்சியின் மூத்த தலைவர்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பளித்து முக்கியத்துவம் கொடுத்ததும் அதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார். ஆனால், 2013ல் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக பொறுப்பேற்ற பிறகு மூத்த தலைவர்களிடம் ஆலோசனை கேட்கும் நடைமுறை முழுவதுமாக தகர்க்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு அனுபவமில்லாதவர்கள் கட்சியை நடத்தும் நிலை உருவானதாக குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

ராகுல் ஒரு குழந்தை

2013-ம் ஆண்டு அரசு வெளியிட்ட அரசாணையை மீடியாக்கள் முன்பு ராகுல் காந்தி கிழித்து எறிந்தது அவரது குழந்தைத்தனத்திற்கு உதாரணம் என்றும், மற்ற எல்லாவற்றையும் விட ராகுல் காந்தியின் இந்த செயல் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மற்றும் பிரதமரின் அதிகாரத்தை கேள்விக்குறியாக்கியதாகவும் இதனாலயே 2014 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தோல்வியை தழுவ நேர்ந்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

பரிசீலிக்கவில்லை

2013-ல் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் பிரைன்ஸ்டார்மிங் கூட்டத்தில் கட்சியை 2014 தேர்தலுக்கு தயார் செய்யும் புத்தாக்க திட்டங்களை தான் பரிந்துரை செய்ததாகவும், காரியக் கமிட்டியில் அங்கீகரிக்கப்பட்ட அந்த திட்டம் 9 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையகத்தில் உறங்குவதாகவும் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியிடமும் சோனியா காந்தியிடமும் பல முறை நினைவூட்டியும் அந்த திட்டங்களை பரிசீலிக்கவில்லை என குலாம் நபி ஆசாத் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர் தோல்விகள்

ராகுல் காந்தி தலைமையின் கீழ் காங்கிரஸ் இரண்டு பொது தேர்தல்களில் தோல்வியை தழுவியுள்ளதாகவும், 2014 முதல் 2022 வரை 39 சட்டப் பேரவை தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், 2019-க்கு பிறகு கட்சியின் நிலைமை மோசமடைந்திருப்பதாகவும், கட்சிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த மூத்த தலைவர்களை அவமதித்துவிட்டு ராகுல் பதவி விலகியதையும் குலாம் நபி ஆசாத் தனது கடிதத்தில் எடுத்துக்காட்டி உள்ளார்.

ரிமோட் கண்ட்ரோல் மாடல்

மேலும் அவர், “ஐக்கிய முற்போக்கு அரசை சிதைத்த ரிமோட் கண்ட்ரோல் மாடல் தற்போது காங்கிரஸ் கட்சிக்கும் பொருந்தும். பெயரளவுக்கு மட்டுமே சோனியா காந்தி தலைவராக இருப்பதாகவும் முக்கிய முடிவுகளை ராகுல் காந்தியும் சில நேரங்களில் அவரது பாதுகாவலர்களும், உதவியாளர்களுமே எடுக்கின்றனர்.

கடிதம் எழுதியது தவறு

2020-ம் ஆண்டு கட்சியின் நிலை குறித்து சோனியா காந்திக்கு 23 மூத்த தலைவர்கள் இணைந்து கடிதம் எழுதியதால் ராகுல் காந்தி தனது ஆதரவாளர்களை மூத்த தலைவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டு அவமானப்படுத்தினார். கட்சி மீதுள்ள அக்கறையால் கட்சியின் பலவீனத்துக்கான காரணங்களை பட்டியலிட்டு கடிதம் எழுதியது தான் மூத்த தலைவர்கள் செய்த ஒரே குற்றம்.

அழிவு நிலைக்கு சென்றுவிட்டது

காங்கிரஸ் கட்சி மீள முடியாத அழிவு நிலைக்கு சென்று விட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், இனி தேர்வு செய்யப்படுபவரும் நூல்பாவை போலவே செயல்பட முடியும் என விமர்சித்துள்ளார். காங்கிரஸின் உட்கட்சி தேர்தல் கேலிக்கூத்தாகவும் போலித்தனமாகவும் மாறிவிட்டதாகவும், நாட்டில் எங்கேயும் அமைப்பு ரீதியான தேர்தல் நடக்கவில்லை . காங்கிரஸை வழிநடத்தும் ஒரு கூட்டம் தயார் செய்த பட்டியலில் மற்றவர்கள் கையெழுத்திட வற்புறுத்தப்படுவதாகவும்” ஆசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலை தேவையா?

ஒரு காலத்தில் போராடி இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்த இயக்கம் மோசடியின் பிடியில் சிக்குவதற்கும் அது தொடர்வதற்கும் காங்கிரஸ் தலைமை தான் காரணம். இந்தியா சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டில் காங்கிரசுக்கு இந்த நிலை தேவையா என்பது தான் காங்கிரஸ் தலைமை தன்னை தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி என குலாம் நபி தனது ஆதங்கத்தை தெரிவித்து கடிதத்தை முடித்துள்ளார்.

கலை.ரா

மக்களாட்சியின் மரணங்கள்: ராகுல் காந்தி கூறுவது என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *