“ராகுலுக்கு பின்னால் வரும் கூட்டத்தைப் பார்த்து பிஜேபியினர் பயப்படுகிறார்கள்” என காங்கிரஸ் எம்பியும் தென்மாநிலங்களுக்கான நடைப்பயண பொறுப்பாளருமான ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், கட்சியினரிடையே எழுச்சியை ஏற்படுத்தும் வகையிலும் ’பாரத் ஜோடோ யாத்ரா’ எனும், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார்.
மொத்தம் 150 நாட்கள் நடைப்பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, 12 மாநிலங்கள், இரு யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவு பயணித்து காஷ்மீரில் நடைப்பயணத்தை நிறைவு செய்கிறார். அவருடன் காஷ்மீர் வரை 118 பேர் செல்கின்றனர்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் துவங்கிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கடந்த செப்டம்பர் 10ம் தேதி தமிழகத்தை நிறைவு செய்தார். 4 நாட்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் 54 கி.மீ தூரம் நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல்,
செப்டம்பர் 11ம் தேதி முதல் கேரளாவில் நடைப்பயணத்தை தொடர்ந்தார். 8ம் நாளான நேற்று (செப்டம்பர் 14) இரவு சாத்தனூரில் பொதுக்கூட்டத்துடன் முடித்தார்.
8 நாளில் 150 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்ட நிலையில் இன்று (செப்டம்பர் 15) ஓய்வுநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் நாளை (செப்டம்பர் 16) காலை கொல்லம் மாவட்டத்திலிருந்து நடைப்பயணம் துவங்குகிறார் ராகுல்.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் நடைப்பயணம் குறித்து காங்கிரஸ் எம்பியும் தென்மாநிலங்களுக்கான நடைப்பயண பொறுப்பாளருமான ஜோதிமணி இந்திய ஒற்றுமை பயணம் சேனலுக்கு (பாரத் ஜோடோ யாத்ரா) பேட்டியளித்திருந்தார்.
அதில் அவர், “இந்திய ஒற்றுமைப் பயணத்தில் ராகுல் காந்தியின் பின்னால் மகத்தான ஆதரவுடன் மக்கள் ஓடிவருகிற காட்சியைப் பார்ப்பதற்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அவர் பின் நடந்து வருகிறது. வழியெங்கும் மக்கள் ஆரவாரத்துடன் நின்று மக்கள் அவரை வரவேற்கும் நிகழ்ச்சியைப் பார்க்க முடிகிறது. இந்த நாட்டின் நம்பிக்கையாக ராகுல் காந்தியைப் பார்க்கிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் விரோத ஆட்சியிலிருந்து இந்தத் தேசத்தைக் காப்பாற்றி இந்தியாவை ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும், நல்லிணக்கத்துடனும்,
வளர்ச்சியும் மிகுந்த ஒரு நாடாக ராகுல் காந்தியால் எடுத்துச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையை அந்த மகிழ்ச்சி நிறைந்த முகங்களில் பார்க்க முடிகிறது.
ராகுல் காந்தி காஷ்மீர் சென்று சேரும்போது, இந்த நாடே அவர் பின்னால் சென்றுகொண்டிருக்கும்.
நிச்சயமாக நரேந்திர மோடியின் அரசு வீழ்த்தப்படும். ராகுலுக்கு பின்னால் வரும் கூட்டத்தைப் பார்த்துத்தான் பிஜேபியினர் பயப்படுகிறார்கள். அதனால்தான் அவர்கள் வெற்று விமர்சனங்களை வைக்கிறார்கள்.
ஆனால், அந்த விமர்சனங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் தேசத்தின் ஒற்றுமையும் பாதுகாப்புமே நோக்கம் என்ற ஒற்றை நோக்கோடு காங்கிரஸ் கட்சி இந்தக் களத்தில் நடந்துகொண்டிருக்கிறது” என்றார் ஜோதிமணி.
ஜெ.பிரகாஷ்
தமிழகம் கண்ட பாதயாத்திரைகள் 3: நமக்கு நாமே மூலம் வெற்றிபெற்ற ஸ்டாலின்
ஜோ பைடனே ஒரு நிமிடம் அசதந்துட்டாரு அசந்து