மணிப்பூரில் சாலைமார்க்கமாக செல்வதற்கு இன்று (ஜூன் 29) ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், ஹெலிகாப்டர் மூலம் சுராசந்த்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துள்ளார் ராகுல் காந்தி.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பாஜக ஆளும் மணிப்பூரில் கலவரம் தொடர்ந்து வருகிறது. இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்
இந்த நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மணிப்பூருக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி இன்று காலை மணிப்பூர் தலைநகர் இம்பால் விமான நிலையத்தை சென்றடைந்தார் ராகுல்காந்தி. தொடர்ந்து அங்கிருந்து மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான சுராசந்த்பூர் மாவட்டத்திற்கு சாலை மார்க்கமாக ராகுல்காந்தி சென்றார்.
அப்போது ராகுல் காந்தியின் கான்வாய் மீது கையெறி குண்டு தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக கூறி பிஷ்ணுபூர் பகுதியில் போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர்.
இதனை எதிர்த்து ராகுலை வரவேற்க காத்திருந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மணிப்பூருக்கு அமைதி தேவை
இதுகுறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ”மணிப்பூருக்கு பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளிடம் வலியை கேட்க வந்தேன். அனைத்து சமுதாய மக்களும் மிகுந்த அன்புடனும், அன்புடனும் என்னை வரவேற்கின்றனர்.
ஆனால் அரசாங்கம் என்னை தடுத்து நிறுத்துவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மணிப்பூருக்கு அமைதியை அளிப்பது மட்டுமே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும்” என்று கூறி தனது பயணம் தொடர்பான வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
ஹெலிகாப்டரில் பயணம்
பிஷ்னுபூரில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து ராகுலை ஹெலிகாப்டர் மூலம் பயணித்து கலவரத்தால் பாதிக்கப்பட்ட சுராசந்த்பூருக்கு செல்ல போலீசார் அறிவுறுத்தினர்.
அதன்படி சில மணி நேரத்திற்கு போராட்டத்திற்கு பிறகு மீண்டும் இம்பால் விமான நிலையத்திற்கு வந்த ராகுல்காந்தி, அங்கிருந்து மாநில அரசின் ஹெலிகாப்டர் மூலம் சுராசந்த்பூருக்கு தற்போது சென்றுள்ளார்.
அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும் முகாம்களுக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
பின்னர் அங்குள்ள குழந்தைகளுடன் அமர்ந்து தனது மதிய உணவினை உண்டார்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி, இடம்பெயர்ந்த மக்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
கிறிஸ்டோபர் ஜெமா
’பல நல்ல விஷயங்களுக்கு தொடக்கமாக மாமன்னன் இருக்கும்’: கீர்த்தி சுரேஷ்
இடம் மாறிய எதிர்க்கட்சிகள் கூட்டம்!