’ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என காங்கிரஸ் கட்சி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளது.
காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும் கேரள வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தி, ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் ஆரம்பித்த அவரது நடைப்பயணம் பல மாநிலங்களைக் கடந்து, தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த நடைப்பயணத்தின்போதுதான் ராகுல் குடும்பத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
முன்னதாக, கடந்த டிசம்பர் 24ஆம் தேதி, தன் ஒற்றுமைப் பயணத்துடன் டெல்லிக்குள் நுழைந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராகுலுக்கு, இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவரது பாத யாத்திரையின்போது அவரைச் சுற்றிலும் கயிறுகள் பிடிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும்.

ஆனால், கடந்த 24ஆம் தேதி, அத்தகைய பாதுகாப்பு ராகுலுக்கு வழங்கப்படவில்லை என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. அதேநேரத்தில், கட்சி தொண்டர்களே ராகுலுக்கு பாதுகாப்பாக இருபுறமும் அரண்போல அணிவகுத்து வந்தனர் என்று சொல்லும் காங்கிரஸ், இனி வரும் நாட்களில், ராகுல் யாத்திரைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதி உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் எழுதிய கடிதத்தில், ’ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரை கடந்த டிசம்பர் 24ஆம் தேதி டெல்லிக்குள் வந்தபின் பல இடங்களில் பாதுகாப்பு குறைபாடும், அத்துமீறல்களும் நடந்தன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லி காவல் துறை, கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதிலும், இசட்+ பாதுகாப்பு ஒதுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தியைச் சுற்றி பாதுகாப்பு வளையத்தை பராமரிப்பதிலும் தோல்வி அடைந்தது.
நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், காங்கிரஸ் தொண்டர்களும், ராகுல் காந்தியுடன் நடந்து செல்லும் யாத்ரிகளும் பாதுகாப்பு வளையத்தை அமைக்க வேண்டியிருந்தது. எந்த நடவடிக்கையும் எடுக்காமல் டெல்லி காவல்துறை பார்வையாளர்களாக மட்டுமே இருந்தனர்.

நடைபயணத்தில் பங்கேற்றவர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் (Intelligence Bureau) விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரியானா மாநில உளவுப்பிரிவைச் சேர்ந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், நடைபயணத்தின் கன்டெய்னர்களுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தனர்.
இது தொடர்பாக, ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் செல்ல அரசியலமைப்பு உரிமை உள்ளது.
இந்திய ஒற்றுமை நடைபயணம் என்பது நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வருவதற்கான ஒரு பாத யாத்திரை. அரசாங்கம் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடாமல், காங்கிரஸ் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
அடுத்தகட்டமாக பாரத் ஜோடோ யாத்திரை, பஞ்சாப், ஜம்மு காஷ்மீருக்குள் செல்கிறது. இந்த நேரத்தில் உங்களிடம் காங்கிரஸ் கட்சி கேட்பது, உடனடியாக நடவடிக்கை எடுத்து, ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவருடன் சேர்ந்து நடக்கும் தொண்டர்கள் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு: விசாரணை தள்ளிவைப்பு!
தேசிய கட்சியுடன் கூட்டணி இல்லையென்றால்… தினகரன் புது முடிவு!