ராகுல் காந்தியே காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
சென்னையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று (செப்டம்பர் 19) நடைபெற்றது.
இதில் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக்கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், முக்கிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
அதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே வரவேண்டும் என்று 700க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.
ராகுல் காந்தி தலைவரானால் தான் கட்சியில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
ஏற்கனவே ராகுல்காந்தி தான் தலைவராக வேண்டும் என்று ராஜஸ்தான், சத்தீஸ்கர், பீகார், குஜராத் மாநில காங்கிரஸ் கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் ராகுல்காந்தி போட்டியிடுவாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது.
நாடு முழுவதும் நடைபயணத்தை தொடங்கியிருக்கும் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் பாத யாத்திரை மேற்கொண்டபோது, தலைவர் பதவி குறித்து எனக்கு மனதில் எந்த குழப்பமும் இல்லை.
தேர்தல் நடக்கும்போது யார் தலைவர் என்பது தெரியவரும் என்று சூசகமாக பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலை.ரா
மக்களாட்சியின் மரணங்கள் : ராகுல் காந்தி கூறுவது என்ன?