ராகுல் காந்திக்கான பாதுகாப்பு குறைபாடு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியிருக்கிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா எனப்படும் இந்திய ஒற்றுமைப் பயணம் வரும் 30 ஆம் தேதி காஷ்மீரில் நிறைவடைகிறது.
ராகுல் காந்தி தனது நடைப் பயணத்தின் நிறைவு கட்டமாக காஷ்மீரில் இப்போது நடந்துகொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று (ஜனவரி 27) ராகுல் காந்தி காஷ்மீருக்குள் நுழைந்து ஒரு கிலோமீட்டர் தூரமே நடந்த நிலையில்…
போதிய பாதுகாப்பு அளிக்கப்படாத நிலையில் அவரது பயணம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த பரபரப்பான நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உள்துறை அமைச்சரான அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
“இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்திக்கு துரதிர்ஷ்டவசமாக போதிய பாதுகாப்பு அளிக்கப்படாத காரணத்தால் ஜனவரி 27 ஆம் தேதி அவரது நடைபயணம் நிறுத்தி வைக்கப்பட்டது.
ராகுல் காந்தியின் நடைப் பயணத்துக்கு உரிய முழுமையான பாதுகாப்பைத் தருவோம் என்று ஜம்மு, காஷ்மீர் போலீஸ் அறிவித்துள்ளதை நாங்கள் வரவேற்றுப் பாராட்டுகிறோம்.
அதேவேளை ராகுல் காந்தியின் பயணத்தில் ஒவ்வொரு நாளும் ஏராளமான மக்கள் தன்னெழுச்சியாக கலந்துகொண்டு வருகிறார்கள்.
அதனால் பயணத்தில் எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் என்ற சரியான கணக்கை பயண ஏற்பாட்டாளர்களால் அளிக்க முடியாத நிலை இருக்கிறது.
ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளிலும் ஸ்ரீநகரில் நடைபெறும் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் நிறைவு நிகழ்ச்சியிலும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய மூத்த தலைவர்களும் மற்ற கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் ஜனவரி 30 ஆம் தேதி இந்திய ஒற்றுமைப் பயணத்தின் நிறைவு நாள் விழாவில் கலந்துகொள்கிறார்கள்.
எனவே உள்துறை அமைச்சராகிய தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்துக்கு முழுமையான பாதுகாப்பு வழங்குமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டுகிறேன்” என்று அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த சூழலில் இன்று (ஜனவரி 28) ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டுள்ளார்.
–வேந்தன்
கூட்டணி குறித்து சில நாட்களில் முடிவு : செங்கோட்டையன்
“அவரை சந்திக்கக் காத்திருக்கிறேன்”: மறுமணம் குறித்து சோனியா அகர்வால்