சமீபத்தில் சென்னையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில், ”பாஜகவில் சேர்ந்த தனக்கு விரைவில் பதவி தர வேண்டும்” என வெளிப்படையாக கூறி முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் ராகுல் காந்தி அறிவுரையின் அடிப்படையிலேயே விஜய் கட்சி தொடங்கினார் என மற்றொரு அரசியல் குண்டையும் வீசியுள்ளார்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து கடந்த 22ஆம் தேதி அடர் சிவப்பு, மஞ்சள் நிறத்தில் கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். அடுத்த மாதம் கட்சியின் முதல் மாநாடும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் விஜயின் அரசியல் வருகை குறித்து பாஜக உறுப்பினரும், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான விஜயதாரணி பேசுகையில், “நான் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போது, டெல்லியில் ஒரு நாள் நடிகர் விஜய்யை காங்கிரஸில் சேர்ப்பதற்காக சில தலைவர்கள் அழைத்து வந்தார்கள். அப்போது ராகுல் காந்தி ‘நீங்கள் தனி கட்சி தொடங்கினால் நன்றாக இருக்கும்’ என்று தெரிவித்தார். அந்த அடிப்படையில் விஜய் இப்போது கட்சி தொடங்கி இருக்கலாம். காங்கிரஸ்க்கு விஜயுடன் மறைமுக தொடர்பு நிச்சயம் இருக்கும். வரும் காலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் விஜய் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே விஜய் தனது கட்சி கொள்கைகளை அறிவிக்காத நிலையில் பாஜகவின் தூண்டுதலின் பேரில் தான் செயல்பட்டு வருகிறார் என்று குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜயதாரணியின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வப்பெருந்தகை பதில்!
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ”விஜயிடம் எங்கள் தலைவர் ராகுல்காந்தி இப்படியெல்லாம் பேசியிருப்பாரா என்று தெரியவில்லை. நான் அவரிடம் கேட்டுவிட்டு பதில் சொல்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
கடந்த 2009ஆண்டு புதுச்சேரியில் அப்போதைய காங்கிரஸ் முதல்வர் வைத்தியலிங்கம் முன்னிலையில் தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் விஜய். அந்த நிகழ்ச்சியில் 50,000 பேர் திரண்டது புதுச்சேரி காங்கிரசாரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அக்கூட்டத்தில் மாணவி ஒருவரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய விஜய், ”அரசியலில் எனக்கு உடன்பாடு உண்டு. இப்போது நேரம் இல்லை. அதற்கான காலமும் இதுவல்ல. வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவேன். அரசியல் ஒரு கடல். அதைப் பற்றித் தெரிந்து கொண்டு வருவேன்” என்று தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அப்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ராகுல்காந்தி அழைத்ததின் பேரில் அவரை டெல்லி சென்று சந்தித்தார் விஜய். சுமார் 1 மணி நேரம் இருவரும் பேசிய நிலையில், தமிழக காங்கிரஸில் விஜய்க்கு முக்கிய பதவி அளிக்கப்படும் என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பின்னர் இந்த சந்திப்பு குறித்து விஜய் பேட்டியில்,”ராகுல்காந்தியை சந்தித்ததை பெருமையாக கருதுகிறேன். இந்த சந்திப்பில் விஜய் மக்கள் இயக்கம், சினிமா, பொது விஷயங்கள் குறித்து நிறைய பேசினோம். ஆனால் முடிவெடுக்க வேண்டிய அரசியல் விவகாரம் குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 15 ஆண்டுகள் கழித்து விஜய் நேரடி அரசியலில் இறங்கியுள்ள நிலையில் அவரது அரசியல் வருகை குறித்து பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார் விஜயதாரணி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ரூ.650-ல் காஞ்சிபுரம், திருத்தணி, திருவாலங்காடு, திருவள்ளூர் கோயில்களை தரிசிக்கலாம்!