அவதூறு வழக்கில் சிறை தண்டனைக்கு எதிரான ராகுல் காந்தி மனு மீது இன்று (ஏப்ரல் 20) சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது கர்நாடக மாநிலத்தில் கோலார் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் ’மோடி’ பெயர் குறித்து ராகுல் காந்தி பேசியிருந்தார்.
இதுதொடர்பாக குஜராத் பாஜக எம்.எல்.ஏ தொடர்ந்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் கடந்த மார்ச் 23 ஆம் தேதி அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 31 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டது.
சிறை தண்டனை வழங்கிய அடுத்த நாளே ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு நாடு முழுவதும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு தடை கோரி ராகுல் காந்தி சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மேலும் இந்த மனு மீதான தீர்ப்பு வரும் வரை, சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்திருந்தார்.
இந்த இரண்டு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.பி.மொகேரா, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து ஜாமீனை நீட்டித்தார்.
மேலும் ராகுல் குற்றவாளி என அறிவித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரும் மனு மீது பதில் அளிக்குமாறு புர்னேஷ் மோடிக்கும் குஜராத் மாநில அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 13 ஆம் தேதி ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.எஸ்.சீமா, “இந்த வழக்கில் விசாரணை நியாயமாக நடைபெறவில்லை.
மேலும் இதில் அதிகபட்ச தண்டனை தேவையில்லை. இது சட்டத்திற்கு முரணானது.
விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை வழங்காவிட்டால், அது அவரது புகழுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
அவர் எம்.பி என்பதால் அவரது பதவியை பறிக்க ஏதுவாகத்தான் அவருக்கு அதிகட்ச தண்டனை விதிக்கப்பட்டது” என்று வாதிட்டார்.
இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு மீது இன்று சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
சூரத் மாவட்ட நீதிமன்றம் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கியதற்குத் தடை விதிக்கப்பட்டால், ராகுல் காந்தியின் எம்.பி பதவியிழப்பு ரத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
முதன்முறையாக மானசரோவர் செல்லும் பக்தர்களுக்கு மானியம் உயர்வு: சேகர்பாபு
சொந்த மைதானத்தில் ஸ்லோ… ராஜஸ்தானை வீழ்த்திய லக்னோ!
