ராகுல்காந்தி பிரதமர் ஆவதை பாஜகவால் தடுக்க முடியாது : ஜோதிமணி எம்.பி

Published On:

| By christopher

தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள ராகுல்காந்தி, 2024 தேர்தல் மூலம் பிரதமராக வருவார். அதனை பாஜகவால் தடுக்க முடியாது என்று எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், ”எப்படி அனைத்து திருடர்களின் துணைப் பெயரும் ‘மோடி’ என்றே இருக்கிறது?” என்று ராகுல்காந்தி பேசியிருந்தார்.

அவரது இந்த கருத்துக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம் . அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று (மார்ச் 26) சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

rahul gandhi will emerge as the PM

இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. அதையும் மீறி கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி வேணுகோபால் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் பங்கேற்று பேசினர்.

அப்போது காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ராகுல்காந்தி மீதான நடவடிக்கையை எதிர்த்து ஆவேசமாக பேசினார்.

அவர் பேசுகையில், “ராகுல்காந்தி மக்களின் உரிமைக்காக பேசினார். மக்களின் குரலை எதிரொலித்தார். எனது மாநிலத்தில் ராகுல்காந்தியையும், அவரது குடும்பத்தையும் கொண்டாடுகிறார்கள்.

வயநாடு தொகுதி மக்களின் இதயத்தில் இந்த நிமிடம் வரை ராகுல்காந்தி தான் உள்ளார். அவர்களுக்கு ராகுல்காந்தி தான் எம்.பி. அவர் தான் தலைவர்.

அவர் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஜம்முகாஷ்மீர் என இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்காகவும் பேசினார்.

மேலும் அவர் பெண்களுக்காக, விவசாயிகளுக்காக, சிறுபான்மையின மக்களுக்காக தொடர்ந்து பேசினார்.

ஆனால் கோழையான இந்த மோடி அரசு ராகுல்காந்தியின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது. அது என்றும் முடியாது.” என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “நாம் ராஜ்காட்டில் இருக்கிறோம். இந்த இடத்தில் நிகழ்ந்த வரலாற்று உண்மையை உங்களிடம் சொல்கிறேன்.

1922ஆம் ஆண்டு மகாத்மா காந்தி பொய்வழக்கு ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பிடப்பட்டார்.

ஆனால் மகாத்மா காந்தி சற்றும் தளராமல் தனது நேர்மையான பாதையில் தொடர்ந்து பயணித்து ஆங்கிலேயே ஏகாதிபத்திய அரசை இந்தியாவிலிருந்தே விரட்டினார்.

இந்த சம்பவம் நடந்து சரியாக 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு பதியப்பட்டு குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டுள்ளது.

இப்போது ராகுல்காந்தி இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டத்தை துவங்கியுள்ளார். வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோசடியான இந்த பாஜக அரசை ஆட்சியிலிருந்து விரட்டுவார்.

வரலாறு திரும்புகிறது. தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.பி ராகுல்காந்தி, 2024 தேர்தல் மூலம் பிரதமராக வருவார். அதனை பாஜகவால் தடுக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கருப்பு சட்டையுடன் சட்டமன்றத்தை முற்றுகையிடும் காங்கிரஸ்

ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் வரை போராடுவோம்: ஆ.ராசா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.