எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ராகுல் காந்தி டெல்லியில் உள்ள தனது அரசு பங்களாவை இன்று (ஏப்ரல் 22) காலி செய்தார்.
2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குஜராத் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் அவகாசம் வழங்கி ஜாமீன் வழங்கியது. இதனை தொடர்ந்து ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு மக்களவை செயலகம் நோட்டீஸ் அனுப்பியது.
சூரத் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி சூரத் செஷன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு ஏப்ரல் 20-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தநிலையில் ராகுல் காந்தி 2005-ஆம் ஆண்டு முதல் வசித்து வந்த டெல்லி துக்ளக் லேன் பகுதியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்து மக்களவை செயலக அதிகாரியிடம் சாவியை ஒப்படைத்தார். அப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வீட்டை காலி செய்தது குறித்து ராகுல் காந்தி கூறும்போது, “19 வருடங்களாக அரசு பங்களாவில் வசிக்கும் வாய்ப்பை எனக்கு இந்திய மக்கள் தந்தனர். நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உண்மையை பேசுவதற்கு நான் என்ன விலை கொடுக்க வேண்டுமானாலும் தயாராக இருக்கிறேன். ஜன்பத் பகுதியில் உள்ள எனது அம்மாவின் வீட்டில் நான் வசிக்கப்போகிறேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
லியோ இசை வெளியீடு எங்கு? விஜய்யின் திட்டம் என்ன?
ஆணவக்கொலை: தனிச்சட்டம் இயற்ற தயக்கம் ஏன்? – திருமா கேள்வி!