லண்டன் சென்று திரும்பியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம். பி. இன்று (மார்ச் 16) நாடாளுமன்றத்திற்கு வருகை தரவுள்ளார். அப்போது லண்டனில் உரையாற்றியது தொடர்பாகப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டன் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் சொற்பொழிவாற்றினார்.
அப்போது அவர், இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாகவும், தான் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் மத்திய அரசின் கண்காணிப்பு வளையத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் வெளிநாட்டில் இந்திய ஜனநாயகம், நாடாளுமன்றம் குறித்துப் பேசியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் முதல் நாளிலேயே மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தீர்மானம் கொண்டு வந்தார்.
அதே சமயம் அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அமளியில் ஈடுபட்டன.
அதானி விவகாரத்தை மறைப்பதற்கே ராகுல் காந்தி குறித்து ஆளும் கட்சி பேசுவதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
இந்நிலையில் லண்டன் பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள ராகுல் காந்தி இன்று நாடாளுமன்ற அவை நடவடிக்கையில் பங்கேற்பார் என காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து, லண்டனில் பேசியது தொடர்பாகவும் விளக்கமளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோன்று இன்று அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவை கூட்ட வேண்டும் என்று ஆம் ஆத்மி எம். பி சஞ்சய் சிங் மாநிலங்களவையில் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
“அரசியலமைப்புச் சட்டத்தின் 105 ஆவது பிரிவின் கீழ் எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் குறித்து விவாதிக்க வேண்டும்” என்று காங்கிரஸ் எம். பி மணீஷ் திவாரி, மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.
ஆளுநர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என இன்று 4 ஆவது முறையாக தி.மு.க சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரியா
எப்படி இருக்கிறார் ஈவிகேஸ் இளங்கோவன் ?
பெண் வாடிக்கையாளருக்கு நள்ளிரவில் மெசேஜ் அனுப்பிய ரேபிடோ ஓட்டுநர் !