வட இந்தியாவின் கடும் குளிரில் வெறும் வெள்ளை டி ஷர்ட் மட்டும் அணிந்துகொண்டு நடைபயணம் மேற்கொள்வது ஏன் என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.
ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணத்தை 100 நாட்கள் கடந்து தற்போது டெல்லியில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று (டிசம்பர் 24) அவருடன் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடைபயணம் செய்தனர்.
டெல்லியின் கடும் குளிரில் ராகுல் காந்தி தாம் வழக்கமாக அணியும் டி ஷர்ட், பேண்ட், ஷூவுடன் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடும் குளிரில் நடைபயணம் மேற்கொள்ளும் எனக்கு எப்படி சளி பிடிக்கவில்லை என்று கேள்வி எழுப்பும் பத்திரிகையாளர்கள் அதே கேள்வியை இங்குள்ள விவசாயிகளிடமோ, தொழிலாளர்களிடமோ கேட்பதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று டெல்லி செங்கோட்டையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, “வட இந்தியாவில் கடும் குளிரில் நடைபயணம் செய்யும் எனக்கு எப்படி சளி பிடிக்கவில்லை என்று பத்திரிகையாளர்கள் என்னிடம் தொடர்ந்து கேட்கிறார்கள்.
ஆனால் அவர்கள் விவசாயிகள், தொழிலாளிகள், ஏழைக்குழந்தைகளிடம் இந்த கேள்வியை கேட்பதில்லை. நான் இதுவரை 2,800 கி.மீ தூரம் நடைபயணம் செய்திருக்கிறேன். ஆனால் அது பெரிய விஷயமல்ல.
இந்தியா முழுவதும் விவசாயிகள், தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் என்னை விட தினமும் அதிக தூரம் நடந்து செல்கின்றனர். நான் நடைபயணத்தை ஆரம்பித்தபோது அனைத்து இடங்களிலும் வெறுப்பு இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படி எதையும் நான் பார்க்கவில்லை. தொலைக்காட்சி பார்க்கும் போது, இந்து – முஸ்லீம் பிரச்சனைகள் பற்றி மட்டுமே ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் இந்திய மக்கள் அப்படி இல்லை.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
செல்வம்